ECONOMYMEDIA STATEMENTPBT

ஆலயங்களில் தீபாவளி வழிபாடு-தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி

கோலாலம்பூர், அக் 29– இரண்டு டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றவர்களுக்கு மட்டுமே தீபாவளி தினத்தன்று  ஆலய வழிபாட்டில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.

தேசிய மீட்சித் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள பல்வேறு நிலைகளுக்கேற்ப எஸ்.ஒ.பி. எனப்படும் நிலையான வழிகாட்டு  நெறிமுறைகளும் வேறுபடுவதாக தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை கூறியது.

தேசிய மீட்சித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் உள்ள ஆலயங்களில் ஆலயங்களின் பரப்பளவைப் பொறுத்து பக்தர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் என்பதோடு குறைந் து ஒரு மீட்டர் கூடல் இடைவெளியைக் கடைப்படிப்பதும் கட்டாயமாக்கப்படும் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

ஆலங்களில் வழிபடுவதற்கான நேரம் அதிகாலை 6.00 மணி முதல் பிற்பகர் 2.00 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆலயங்களில் அன்னதான நிகழ்வுக்கு அனுமதி கிடையாது. மாறாக, உணவுப் பொட்டலங்களை பக்தர்களுக்கு வழங்கலாம்.

தேசிய மீட்சித் திட்டத்தின் நான்காம் கட்டத்தில் உள்ள ஆலயங்களில் பரப்பளவைப் பொறுத்து பக்தர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும், குறைந்தது ஒரு மீட்டர் கூடல் இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும். அன்னதான நிகழ்வுகளுக்கு இங்கு தடை விதிக்கப்பட்டு பொட்டலங்களில் பக்தர்களுக்கு உணவு அனுமதிக்கப்படுகிறது.

பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், கிளந்தான், சபா மற்றும் சரவா ஆகிய மாநிலங்கள் தேசிய மீட்சித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் உள்ளன.

கூட்டரசு பிரதேசம் கோலாலம்பூர், புத்ரா ஜெயா, லபுவான், சிலாங்கூர், பகாங், நெகிரி செம்பிலான், ஜொகூர், திரங்கானு, மலாக்கா ஆகிய மாநிலங்கள் தேசிய மீட்சித் திட்டத்தின் நான்காம் கட்டத்தில் உள்ளன.

சமய சார்ந்த ஊர்வலங்களுக்கும் தடை  விதிக்கப்பட்டுள்ளதோடு ஊராட்சி மன்றங்களின் ஒப்புதலின் கீழ் தீபாவளி சந்தைகளை நடத்த அனுமதிக்கப்படுகிறது.


Pengarang :