ECONOMYMEDIA STATEMENTNATIONAL

காஜாங் தொகுதியில் 2,000 கோவிட்-19 சுயப் பரிசோதனை கருவிகள் விநியோகம்

ஷா ஆலம், நவ 9- காஜாங் சட்டமன்றத் தொகுதியிலுள்ள 2,000 பேருக்கு கோவிட்-19 சுயப் பரிசோதனைக் கருவிகள் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன.

அந்த கருவிகள் கடந்த மாதம் 8 ஆம் தேதி தொடங்கி இவ்வாண்டு இறுதி வரை கட்டங் கட்டமாக விநியோகிக்கப்படும் என்று காஜாங் சட்டமன்ற உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

காலை மற்றும் இரவு சந்தை ஏற்பாட்டாளர்கள், டாக்சி ஓட்டுநர் சங்கங்கள் மற்றும் சிலாங்கூர் மலாய் தொழில்முனைவோர் வர்த்தக சங்கத்தினர் ஆகிய தரப்பினருக்கு இந்த கருவிகள் விநியோகிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சுமார் பத்தாயிரம் வெள்ளி செலவிலான இத்திட்டம் தனது சொந்த முயற்சியிலும் மாநில அரசின் ஒத்துழைப்பின் வாயிலாகவும் மேற்கொள்ளப்படுவதாக கூறிய அவர், குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் மற்றும் பள்ளிவாசல்கள், வழிபாட்டுத தலங்களுக்கும் இந்த கருவிகள் வழங்கப்படும் என்றார்.

இந்த கருவியின் மூலம் நோய்த்தொற்று  கண்டிருப்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். இதன் வழி நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.

சுமார் 60,000 கோவிட்-19 சுயப் பரிசோதனைக் கருவிகளை மாநிலம் முழுவதும் விநியோகிக்கும் பணி வரும் செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக கூறியிருந்தார்.

தொகுதி சேவை மையங்கள் மற்றும் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அலுவலகங்கள் வாயிலாக இந்த கருவிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தரப்பினருக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

 


Pengarang :