ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

தடுப்பூசி பெறாத அரசு ஊழியர்களில் கல்விமைச்சை சேர்ந்தவர்களே அதிகம்

புத்ரா ஜெயா, நவ 9- கோவிட்-19 தடுப்பூசியை இன்னும் பெறாத அரசு ஊழியர்களில் கல்வியமைச்சை சேர்ந்தவர்களே அதிகம் என நம்பப்படுவதாக பொதுச் சேவைத் துறையின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ  முகமது கைருள் அடிப் அப்துல் ரஹ்மான் கூறினார்.

எனினும், தடுப்பூசி பெறாதவர்கள் எண்ணிக்கை குறித்த விபரங்களை அவர்  வெளியிடவில்லை. இதன் தொடர்பான தரவுகளைத் திரட்டும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இன்னும் இரு தினங்களில் அப்பணி முற்றுப் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

தடுப்பூசியை இன்னும் பெறாதவர்கள் பற்றிய விபரங்களை மனிதவள தகவல் நிர்வாக முறை மற்றும் சுகாதார அமைச்சின் மைசெஜாத்ரா செயலி ஆகியவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

இப்பணி முற்றுப்பெற்றவுடன் தடுப்பூசி பெறுவதிலிருந்து விலக்கு பெறுவதற்கு அவர்கள் கூறிய காரணங்களைக் கண்டறியும் பணி மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அவர்கள் வழங்கிய காரணங்கள் துறைத் தலைவர்கள் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும். அந்த காரணங்களை ஆராய்ந்து அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கும் பணியில் அவர்கள் ஈடுபடுவர் என்றார் அவர்.

நவம்பர் 1 ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் உள்பட அனைத்து அரசு ஊழியர்களும் தடுப்பூசி பெற வேண்டும் என்று பொதுச் சேவைத் துறை சுற்றறிக்கை வாயிலாக வலியுறுத்தியிருந்தது.

அவ்வாறு செய்யத் தவறுவோர் மீது வேலை நீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் அது கூறியிருந்தது.


Pengarang :