ECONOMYPBTSELANGOR

ஷா ஆலமில் இணையம் வழி அபராதம், வாடகை செலுத்தும் முறை அடுத்தாண்டு அமல்

ஷா ஆலம், நவ 9- அபராதம், வாகன நிறுத்துமிடக் கட்டணம் மற்றும் வர்த்தக மைய வாடகை ஆகியவற்றை இணையம் வாயிலாக செலுத்தும் முறையை ஷா ஆலம் மாநகர் மன்றம் அடுத்தாண்டில் அமல்படுத்தவுள்ளது.

கடந்த ஜூலை மாதம் முதல் மதிப்பீட்டு வரியை இணையம் வாயிலாக செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ ஜமானி அகமது மன்சோர் கூறினார்.

ரொக்கமில்லா கட்டண முறையை அமல்படுத்துவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு தவணையிலும் அதிகரித்து 60 விழுக்காட்டை எட்டியுள்ளது. ஆகவே இத்திட்டத்தை இதர சேவைகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என்று அவர் சொன்னார்.

இருப்பினும், முகப்பிடங்களில் ரொக்கமாக கட்டணத்தை செலுத்தும் முறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த இணைய வழி கட்டண முறை எளிதானதாகவும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும் உள்ளதாக கூறிய அவர், வரும் 2022 ஆம் ஆணடில் ரொக்கமில்லா புதிய சமூகத்தின் உருவாக்கத்திற்கும் துணை புரிய முடியும் என்றார்.

ஷா ஆலம் மாநகர் மன்றம், www.eps.mbsa.my எனும் அகப்பக்கம் வாயிலாக மதிப்பீட்டு வரியைச் செலுத்தும் திட்டத்தை கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி தொடக்கியது.


Pengarang :