ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

வெ.60 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட மருத்துவ பொருள்கள் பறிமுதல்

 கோலாலம்பூர், நவ 11-சுகாதார அமைச்சின் மருந்தக அமலாக்கப் பிரிவு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இம்மாதம் வரை நாடு முழுவதும் 666  மையங்களில் நடத்திய சோதனையில் 58 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பதிவு செய்யப்படாத வீரிய மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதே காலகட்டத்தில் வைட்டமின் சி ஊசிகளை விற்கும்  187 மையங்களில்  நடத்தப்பட்ட சோதனையில்  278,202 வெள்ளி மதிப்புள்ள பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக சுகாதார அமைச்சின் மருந்தக சேவைப் பிரிவு தலைமை இயக்குநர் ரோர்ஹலிசா ஏ ஹலிம் கூறினார்.

பதிவு செய்யப்படாத வீரிய மருந்துகள் மற்றும் வைட்டமின்  சி ஊசிகளின் விற்பனையைத் தடுப்பதற்காக தமது துறை தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார். சுகாதார அமைச்சின் அமலாக்கப் பிரிவு கடந்த 2019 முதல் இவ்வாண்டு நவம்பர் வரை வீரிய மருந்துகள் மற்றும் வைட்டமின் சி ஊசிகள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 362 புகார்களைப் பெற்றுள்ளது  என்று அவர்  ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தையில் பரவலாக நடக்கும் சுகாதார பொருட்கள் மற்றும் மருந்துகளின் விற்பனை மற்றும் விளம்பரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் கூறப்பட்ட குற்றச்சாட்டு தவறானது என்றும் அவர் தெரிவித்தார்.

“மலேசியாவில் விற்பனை செய்யப்படும் சுகாதாரப் பொருட்கள் மற்றும் மருந்துகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதற்கு முன்பு மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்தில்  பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த மருந்தக அமலாக்கப் பிரிவு மூலம் சுகாதார அமைச்சு எப்போதும் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கையை மேற்கொள்கிறது என்று அவர் கூறினார்.

இணையம் மூலம் விற்கப்படும் வீரிய மருந்துகள் மற்றும் வைட்டமின் சி ஊசிகள் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத மருந்துகளின் கண்காணிப்பை தனது துறை அதிகரித்துள்ளதாகவும் மின் வர்த்தகத் தளங்களில் விளம்பரங்கள் மற்றும்  பொருட்களின் விற்பனை தடை செய்யப்படும் என்றும் நோர்ஹலிசா கூறினார்.


Pengarang :