ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

சிலாங்கூரில் 1,245 மகளிர் தொழில்முனைவோர் “நாடி” எனப்படும் நியாகா டாருள் ஏசான் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

ஷா ஆலம்,  நவ 11-  இவ்வாண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி வரை சிலாங்கூரில்  1,245 மகளிர் தொழில்முனைவோர் “நாடி” எனப்படும் நியாகா டாருள் ஏசான் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி முதல் இந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டதாக ஹிஜ்ரா அறவாரியத்தின் சந்தை மேம்பாட்டுப் பிரிவு நிர்வாகி  முகமது ரிட்வான் அஸ்மாரா கூறினார்.

மொத்தம் 50 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளியை உள்ளடக்கிய இந்த திட்டத்தின் வழி  பயனாளிகள் வெ.1,000 முதல் வெ.5,000  வரை கடனுதவி பெற்றனர் என்று அவர் தெரிவித்தார். இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலந்தொட்டு இதற்கு கிடைத்து வரும் ஆதரவு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது.   கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலால் ஏற்பட்ட மோசமான பாதிப்பிலிருந்து மீண்டு வர பலர் வணிகத்தில் ஈடுபட விரும்புகிறார்கள்.

இந்த நிதியுதவி அவர்களின் குடும்பங்களுக்கு  வருமானத்திற்கான புதிய வழியை உருவாக்குவதற்கு உதவும் என்று முகமட் ரிட்வான் குறிப்பிட்டார். வர்த்தக சுழல் நிதியைப் பெறுவதற்கு மலேசிய நிறுவன ஆணையத்தின் லைசென்ஸ் அல்லது ஊராட்சி மன்றங்களின் உரிமத்தைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இத்த எளிமையான நடைமுறை காரணமாக எந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்படவில்லை என்றார் அவர்.

தொழில்முனைவோர் ஒரு குழுவை உருவாக்க மட்டுமே ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால் ஒருவருக்கொருவர் பிணைப்பைக் கொண்டிக்கவேண்டிய அவசியமில்லை. அதே சமயம், வணிக நடவடிக்கைகள் சட்டத்திற்கு எதிராக இல்லாதிருப்பது அவசியம் என்று அவர் கூறினார்.

கோவிட்-19 காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டுள்ள சிலாங்கூர் மக்களுக்கு உதவும் நோக்கில் நாடி வர்த்தக உதவித் திட்டத்தை செயல்படுத்த ஹிஜ்ரா ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. மற்றும் அனைத்து இன மகளிரும் இத்திட்டத்தில் பங்கேற்கலாம். ஆர்வமுள்ளோர் www.hijrahselangor.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது  மாநிலத்திலுள்ள 20 ஹிஜ்ரா  கிளைகளில் நிதி அதிகாரியைத் தொடர்புகொள்ளலாம்.


Pengarang :