ECONOMYMEDIA STATEMENTPBT

இரு புதிய திட்டங்களை ‘ஸ்மார்ட் சிலாங்கூர்‘ அடுத்தாண்டில் அறிமுகம் செய்யும்

ஷா ஆலம், நவ 12– ஸ்மார்ட் சிலாங்கூர் தொகுப்பின் கீழ் மூன்று புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படவுள்ளன. அவற்றில் இரு திட்டங்கள் அடுத்தாண்டு செயல்படுத்தப்படும்.

வாகன நிறுத்துமிடக் கட்டணத்தை செலுத்தும் இ-கூப்பன் முறை அதில் ஒன்றாகும் என்று ஸ்மார்ட் சிலாங்கூர் டெலிவரி யூனிட் (எஸ்.எஸ்.டி.யு.) நிர்வாக இயக்குநர் டாக்டர் பஹாமி ஙா கூறினார்.

காகித கூப்பன்கள் மற்றும் சில்லரை காசு மூலம் கார் நிறுத்துமிடக் கட்டணம் செலுத்தும் முறைக்கு மாற்றாக விளங்கும் இத்திட்டம் வரும் ஜனவரி முதல் தேதி அமல்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த புதிய முறையின் கீழ் பயனீட்டாளர்கள் ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் செயலி அல்லது இ-கூப்பன் வாயிலாக கார் நிறுத்தமிடக் கட்டணத்தைச் செலுத்தலாம் என்று அவர் தெரிவித்தார்.

அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் இ-கூப்பன் முகவர்களை நியமிக்கும் மற்றும் பயிற்சியளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காகித கூப்பன் முகவர்களான இவர்கள் பயிற்சி பெற்று இ-கூப்பன் முகவர்களாக  செயல்படுவர் என்றார் அவர்.

அடுத்தாண்டில் அமல்படுத்தப்படவுள்ள மற்றொரு திட்டம் கட்டண மறுசுழற்சி திட்டமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

செயலி ஒன்றின் மூலம் தங்கள் பகுதியில் உள்ள மறுசுழற்சி வியாபாரிகளிடம் பொதுமக்கள் மறுசுழற்சி பொருள்களை விற்பதற்குரிய வாய்ப்பினை இத்திட்டம் வழங்குகிறது என்று அவர் சொன்னார்.

இது தவிர, பொதுமக்கள் வாடகைக்கு பெற்று பயன்படுத்தக்கூடிய மின்சார மோட்டார் சைக்கிள் திட்டத்தை அமல்படுத்தவும் தாங்கள் திட்டமிட்டுள்ளதாக டாக்டர் பஹாமி தெரிவித்தார்.

கார்பன் இல்லாத நகரங்களை உருவாக்கும் மாநில அரசின் திட்டத்திற்கேற்ப இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

வரும் 2025 ஆம் ஆண்டு வாக்கில் ஷா ஆலம் மற்றும் புத்ரா ஜெயாவில் 200,000 மின்சார மோட்டார் சைக்கிள்களை பயன்பாட்டில் விட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :