ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மாநாட்டை துங்கு அமீர் ஷா தொடக்கி வைத்தார்

கோலாலம்பூர், நவ 18- சிப்ஸ் எனப்படும் 2021 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டை மேன்மை தங்கிய சிலாங்கூர் ராஜா மூடா  துங்கு அமீர் ஷா இன்று அதிகாரப்பூர்மாக தொடக்கி  வைத்தார்.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில்  இன்று தொடங்கி வரும் 21 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் சார்பாக ராஜா மூடா  திறந்து வைத்தார்.

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, வாணிக மற்றும் தொழில் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஆசியான் பிராந்தியத்தில் அதி முக்கியத்துவம் வாய்ந்த மாநாடுகளில் ஒன்றாக  இந்த வருடாந்திர உச்சநிலை மாநாடு விளங்குவதாக டத்தோஸ்ரீ அமிருடின் கூறினார்.

உள்நாட்டு மற்றும் அனைத்துலக தொழில்துறையினரை ஒன்று திரட்டும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதலீட்டாளர்கள் தங்கள் வர்த்தக ஒருங்கமைப்பை ஒன்றிணைப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் இந்த சிப்ஸ் 2021 மாநாடு வாய்ப்பினை வழங்குகிறது. சவால்மிக்க நடப்பு பொருளாதாரச் சூழலில் இத்தகைய மாநாடு நடத்தப்படுவது மிக அவசியமாகும் என்றார் அவர்.

இந்த சிப்ஸ் 2021 மாநாடு மற்றும் கண்காட்சியின் வாயிலாக சிலாங்கூரில் காணப்படும் வாய்ப்புகளை பறைசாற்றுவதற்குரிய வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் சொன்னார்.

இயங்கலை வாயிலாகவும் பேராளர்களின் நேரடி பங்கேற்பின் வழியும் நடத்தப்படும் இந்த நான்கு நாள் மாநாட்டின் சிறப்பு அங்கமாக கண்காட்சியும் நடத்தப்படுகிறது.

 


Pengarang :