ECONOMYMEDIA STATEMENTPBT

பி40 தரப்பினரின் வர்த்தக விரிவாக்கத்திற்கு வெ. 1.65 கோடி வெள்ளி ஒதுக்கீடு

ஷா ஆலம், நவ 22- கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் புளுபிரிண்ட் எனப்படும் வறுமை ஒழிப்புத் பெருந்திட்டத்தில் பங்கேற்றுள்ள 4,811 பேருக்கு வர்த்தக உதவிகளை வழங்க சிலாங்கூர் அரசு 1 கோடியே 65 லட்சம் வெள்ளியைச் செலவிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்திக் கொள்வதற்கு ஏதுவாக ஐயாயிரம் வெள்ளிக்கும் மேற்போகாத விலையில் வர்த்தக உபகரணங்களை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாக  அமைந்துள்ளது என்று மோரிட் சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுள் பகாருடின் கூறினார்.

தையல் இயந்திரம், குளிபதனப் பெட்டி, சமையல் உபகரணங்கள், சைக்கிள் பழுதுபார்ப்பு கருவிகள் உள்பட பல்வேறு விதமான பொருள்கள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

தீவிர ஆய்வுக்குப் பின்னர் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு  வர்த்தக உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் அவர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்திக் கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்படுகிறது என்றார் அவர்.

வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரை இலக்காக கொண்டு இந்த வறுமை ஒழிப்பு பெருந்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

தையல் தொழில், மளிகை வியாபாரம், உணவு விற்பனை, குழந்தை பராமரிப்பு மற்றும் கைவினைப் பொருள் தயாரிப்பு போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்கலாம்.


Pengarang :