ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கணவரின் சேமிப்புத் தொகை மனைவியின் கணக்கிற்கு மாற்றும் ஐ-சாயாங் திட்டம்- இ.பி.எஃப். அறிமுகம்

கோலாலம்பூர், நவ 23- ஊழியர் சேமநிதி வாரியம் (இ.பி.எஃப்) ஐ-சாயாங் எனும் புதிய திட்டத்தை அடுத்தாண்டு முதல் காலாண்டில் அறிமுகம் செய்யவுள்ளது.

மக்களின் சுபிட்சத்தை உறுதி செய்வதற்காக அந்த நிதி வாரியம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த ஐ-சாயாங் திட்டம் அமைகிறது.

ஊழியர் சேம நிதி வாரியத்தில் கணவரின் கணக்கில் இருக்கும் தொகையில் இரண்டு விழுக்காட்டை சுயவிருப்பத்தின் பேரில் மனைவியின் சேமிப்பு கணக்கிற்கு மாற்ற இந்த திட்டம் வகை செய்வதாக இ.பி.எஃப். தலைவர் டான்ஸ்ரீ அகமது பட்ரி முகமது ஜாஹிர் கூறினார்.

ஐ-லிண்டோங் எனும் பெயரில் மற்றொரு திட்டத்தையும் அந்த ஓய்வுகால நிதி வாரியம் அமல்படுத்துகிறது. இத்திட்டத்தின் வழி இ.பி.எஃப். தளத்தின் வாயிலாக ஆயுள் மற்றும் கடுமையான நோய்களுக்கான காப்புறுதி பாலிசி வாங்குவதற்கு இத்திட்டம் வகை செய்கிறது என்றார் அவர்.

இது தவிர, விவசாயம் அல்லாத அதிகாரப்பூர்மற்ற துறைகளில் வேலை செய்வோருக்கு இ.பி.எஃப். பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்வது உள்ளிட்ட அணுகுறைகளும் ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இ.பி.எஃப். உறுப்பினர்கள் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் 11 விழுக்காட்டிற்கும் கூடுதலான தொகையை தங்கள் பங்காக சேமநிதியில் சேர்க்க முதலாளிகளை நிர்பந்திக்கும் திட்டத்திற்கும் தாங்கள் ஆதரவு அளிப்பதாக அவர் சொன்னார்

இன்று இங்கு நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு அனைத்துலக சமூக சுபிட்ச மாநாட்டின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :