MEDIA STATEMENTNATIONALRENCANA

மலாக்கா தேர்தல் முடிவு, மலாக்கா மக்களுக்கு தோல்வி.

ஷா ஆலம் நவ 24; நடந்து முடிந்த மலாக்கா சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி – தோல்வி என்பது பற்றி பக்காத்தான் ஹராப்பான் ஆதரவாளர்கள் மிக காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.

தோல்விக்கு கெஅடிலானையும், ஜசெகாவையும், டத்தோ ஶ்ரீ அன்வாரையும், லிம் தந்தை-தனையனையும் விமர்சிக்கின்றனர், வாட்டி எடுக்கின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், மாறி – மாறி குற்றம் சாட்டும் அனைவரும் அறியாதது மலாக்கா மாநில தேர்தலில் உண்மையாக தோல்வி கண்டவர்கள் மலாக்கா வாக்காளர்கள்தான் என்பதனை!

ஆனால், அவர்கள் அனைவரும் உண்மையை மறந்து டத்தோ ஶ்ரீ அன்வாரையும், லிம் தந்தை-தனையன் இணையை குற்றம் சாட்டுவது  வேடிக்கையாக உள்ளது.

கடமையில் தூங்கி விட்ட முன்கள பணியாளர்களின் கூப்பாடு

பக்காத்தான் ஹராப்பானுக்கு தோல்வியா என்ற அதிர்ச்சியில் உரக்க கூச்சலிடுபவர்களில்  பெரும்பாலோர், பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள்! சட்டமன்ற உறுப்பினர்கள்!

களத்தில் நேரடியாக இறங்கியவர்கள். களநிலை என்ன? மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று ஆராய்ந்து தலைவர்களிடம் முன்கூட்டியே தெரிவித்தார்களா?

ஆக பக்காத்தான் ஹராப்பான் முன்கள பணியாளர்கள் அவர்கள் பணியில் தூங்கி விட்டு, சுய இயலாமையை கூட உணராமல்  தலைவர்களை சாடுகின்றனர்.

வெற்றி என்ன, தோல்வி எது என்பதை புரிந்துக்கொள்ளாதவர்கள், தலைவன் யார்? தியாகி யார்? திருடன் யார் என அடையாளம் தெரியாத இவர்கள், மலாக்கா மக்களிடம் எப்படி வாக்கு வேட்டையாடி இருப்பார்கள் என்று நினைக்கும் பொழுது ஆச்சரியம் மேலோங்குகிறது

ஜ.செக, கொஅடிலான் தலைவர்களை சாடும் தலைவர்கள், ஓரளவு மனித இயல்புகளை பரிந்துக்கொள்ள வேண்டும் மீண்டும் சரித்திர பாடம் படிக்க வேண்டும்.

130 ஆண்டுகள் மாறாதவர்களை சில நாட்களில் மாற்றுவதா?

உதாரணத்துக்கு- போர்த்துகீசியர்கள் 130 ஆண்டுகள் மலாக்காவை ஆண்டனர், அங்கு  அவர்கள் வணிகத்தை விட சமயத்தை வளர்க்க அரும்பாடுபட்டனர் ஆனால் மலாக்காவில் இன்றும் இஸ்லாம் வளர்கிறது.

அதே நிலை தான் உலகில் பல நாடுகளில், ஐரோப்பியர்கள் ஆட்சி இந்தியாவில் 1509 ம் ஆண்டில் தொடங்கி விரிவடைந்தது, சுமார்  400 ஆண்டுகள், ஆனால் ஐரோப்பியர்களின் பணம், ஆட்சி, அதிகாரம்  என்ற அனைத்தாலும் எத்தனை விழுக்காடு இந்தியர்களை மதம் மாற்ற முடிந்தது?

இதுதான் மனிதர்களின் நிலைபாடு, அதனால், அன்வாரோ, லிம் தந்தை-தனையன்  அணியோ சில நாட்களில் மலாக்கா மக்களை மனம் மாற்றி விட முடியும் என எதிர்பார்பது சிறுபிள்ளை தனம்.

ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சாமிநாதனை விடுதலை புலி ஆதரவாளர் என குற்றம் சாட்டினர். பின்,  அரசாங்கம் அவரை எப்படி?  ஏன் விடுதலை செய்தது? அவர் குற்றம் புரியவில்லை என்பதை அரசாங்கம் உணர்ந்தப்பின்  அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அப்படியானால் ஒரு நிரபராதியை தண்டித்த அரசாங்கம் எவ்வளவு பெரிய தவற்றை புரிந்துள்ளது. அவரை பல மாதங்கள் சிறை படுத்தியது அதர்மம் ஆகாதா? சாமிநாதன் குற்றம் அற்றவர் என்ற ஆணித்தரமான உண்மையை கூட இத்தொகுதி வாக்காளர்கள் ஏற்க வில்லை என்பதைத்தானே காடேக் தொகுதி தேர்தல் முடிவு காட்டுகிறது.

வாக்காளர்கள் ஏன் நீதி, தர்மம், நியாயம் பக்கம் நிற்கவில்லை? மலாக்கா மக்கள் எப்படி பட்டவர்கள் என்பதனைத்தானே இது காட்டுகிறது.

சாமிநாதனுக்கு அநீதி இழைத்தவர்களை  அல்லவா வாக்காளர்கள் தண்டித்திருக்க வேண்டும். ஆனால் மீண்டும் சாமிநாதனுக்கு தண்டனை!

 

அடுத்து இன்னொரு பக்கம் பார்ப்போம்.

1 .நாட்டுக்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்யும் ராணுவ வீரர்கள் கூட்டுறவு கழகத்தை சுரண்டியர்கள் யார்?

2 . ஏழை பெல்டா விவசாயிகளின் உழைப்பை சூறையாடிய கூட்டம் எது?

  1. வருமையிலுள்ளவர்கள் வயதானவர்களுக்காக சிறுக-சிறுக ஹஜ் யாத்திரை மேற்கொள்ள சேமித்து வைத்ததை விழுங்கிய கூட்டம் எது ?
  2. தொழிலாளர்களின் சேமநிதி சந்தாவையும் விட்டுவைக்காத கூட்டம் எது ?
  3. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேல் 1 எம்.டி.பி ஊழல் விவகாரத்தில் சிக்கி நாடே அல்லோல படுகிறது. ஒரு தேசிய மகா மோசடியின் கதா நாயகன் நஜிப் என்பதை அறியாதவர்களா மலாக்கா வாக்காளர்கள்?

பாரிசானின் ஊழல், மோசடி என்று அடுக்கிட்டே போகலாம். ஆனால் அது  அவசியமில்லை.

உன் நண்பன் யாரென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்

இவ்வளவையும் அறிந்துள்ள மலாக்கா வாக்காளர்கள் பாரிசானுக்கு ஓட்டு போடுகிறார்கள் என்றால், அநீதியை ஆதரிக்கிறார்கள், ஊழலை வரவேற்றுள்ளனர், மலாக்கா வாக்காளர்கள் செய்த கண்மூடித்தனமான தவறுக்கு அன்வாரை எப்படி குற்றவாளியாக்குவது?

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் பல நூறு கோடி வெள்ளிகள் களவாடியதாக கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது, சரி நஜிப் மீதான குற்றத்தை நம்ப வில்லையா? குற்றமே நடக்கவில்லை  என்றால் பல நூறு கோடி வெள்ளிகளை மீட்டுள்ளதாக அரசாங்கம் கூறி வருவது எப்படி?

ஒரு திருடனை, அயோக்கியனை முன்நிறுத்தி  வேட்பாளர்கள் ஆதரவு தேடியதும், எந்த நல்ல மனிதன் ஒரு நாடறிந்த அயோக்கியனை தனக்காக வோட்டு சேகரிக்க அனுமதிப்பான்?

உன் நண்பன் யாரென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன் என்பது சான்றோர் வாக்கு. முக்கியமாக நீதிமன்றம்  குற்றவாளி என தீர்ப்பளித்த பின்பும், குற்றவாளி தலைமையில் ஓட்டுக்கு வேட்டையாடிய கூட்டத்தை, ஆதரித்து ஓட்டளித்த மக்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்?

யார் குற்றவாளி? அயோக்கியர்களை ஆதரித்து ஆட்சிக் கட்டிலில் அமர வைத்த மலாக்கா மக்களா? அன்வாரா? கொஅடிலானா? லிம் தந்தை-தனையனா?

வெற்றிகூட அம்னோவுக்கு இல்லை, தேசிய முன்னணிக்கும் இல்லை,

அநீதியை கண்டு துடித்து எழாத மக்கள், அவர்களின் உரிமையை உணராமல் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை அடுகு வைக்க தயங்காதவர்கள் அக்கறையின்றி வாக்களித்ததுள்ளனர்.

இது மலாக்கா மக்களுக்கே தோல்வி, நீதியை, தர்மத்தை கொன்ற பொறுப்பற்ற மலாக்கா வாக்காளர்களுக்கே தோல்வி!


Pengarang :