ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

காய்கறிகளின் விலை 200 விழுக்காடு அதிகரிப்பு- பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

ஜார்ஜ் டவுன், நவ 24- அண்மைய வாரங்களாக  காய்கறிகளின் விலை 200 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறியது. 

இந்த விலையேற்றத்தை தடுக்க  உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு வாணிக மற்றும்  பயனீட்டாளர் விவகார அமைச்சு மற்றும் ஃபாமா எனப்படும் கூட்டரசு விவசாய சந்தை வாரியத்தை  பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

சந்தையில் விற்கப்படும் சில காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது சங்கம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயரும் என்று விநியோகஸ்தர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் கூறியதாக வியாபாரிகள் அந்த ஆய்வின் போது தெரிவித்தனர் என்றும் சங்கத்தின் தலைவர் மொஹிடின் அப்துல் காதர் கூறினார்.

கடந்த இரண்டு வாரங்களாக காலிஃபிளவர், சிறு கீரை ப்ரோக்கோலி, கடுகுக்கீரை, பீன்ஸ், முட்டைக்கோஸ், சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் ஆகிய 8 வகையான காய்கறிகளின் விலை உயர்ந்து வருவதை எங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்று அவர்   அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

சிறுகீரை ஒரு கிலோ 3.00 வெள்ளியிலிருந்து 9.00 வெள்ளி வரை 200 சதவீதமாக உயர்ந்துள்ளது. காலிஃபிளவர் ஒரு கிலோவுக்கு 7.00 வெள்ளியாக  இருந்தது, தற்போது அது கிலோ 16.00 அதிகரித்துள்ளது. என்றார் அவர்.

அது மட்டுமின்றி, கிலோ 8.00 வெள்ளியாக இருந்த ப்ரோக்கோலியின் விலை 150 சதவீதம் அதிகரித்து   20.00 வெள்ளியாகவும் கடுகுக்கீரை 5.00 வெள்ளியிலிருந்து  8.00 வெள்ளியாகவும் (60 சதவீதம்), பீன்ஸ்  8.00 வெள்ளியிலிருந்து
15.00 வெள்ளியாகவும் (88 சதவீதம்), முட்டைக்கோஸ்  4.00 வெள்ளியிலிருந்து 6.00 வெள்ளியாகும் (50 சதவீதம்), சிவப்பு மிளகாய் 13.00 வெள்ளியிலிருந்து 19.00 வெள்ளியாகவும் (46 சதவீதம்) மற்றும் பச்சை மிளகாய் 10.00 வெள்ளியிலிருந்து 14.00 வெள்ளியாகவும்  (40 சதவீதம்) உயர்ந்துள்ளது என்றார் அவர்.

காய்கறி விலை உயர்வு குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், சட்டத்தை மீறும் வியாபாரிகள் அல்லது மொத்த வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Pengarang :