ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

2022 வரவு பட்ஜெட்டில் ஹிஜ்ரா நிர்வாக கட்டணம் 4 விழுக்காடு குறைப்பு

ஷா ஆலம், நவ 28- சிலாங்கூர் ஹிஜ்ரா அறவாரியத்தின் வர்த்தக கடனுதவிக்கான நிர்வாக கட்டணம் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 4 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.

வணிகர்களின் நலனில் மாநில அரசு கொண்டுள்ள அக்கறையை இந்த கட்டணக் குறைப்பு புலப்படுத்துவதாக உள்ளது என்று பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர் ரோசானா ஜைனால் அபிடின் கூறினார்.

இதன் வழி ஹிஜ்ரா பயனானிகள் செலுத்த வேண்டிய கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் தொகையை சேமிப்பில் வைக்க முடியும் என்பதோடு எதிர்கார அவசர தேவைகளுக்கும் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள இயலும் என்று அவர் சொன்னார்.

கடந்த வெள்ளிக் கிழமை சட்டமன்றத்தில் 2022 வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வெளியிட்ட இந்த அறிவிப்பை நான் பெரிதும் வரவேற்கிறேன். ஹிஜ்ரா தொழில் முனைவோரின் சுமையைக் இதன் வழி குறைக்க முடியும் என நம்புகிறேன் என்றார் அவர்.

முன்பு ஹிஜ்ரா பயனாளிகள் எட்டு விழுக்காட்டு நிர்வாக கட்டணத்தை செலுத்தி வந்தனர். இனி நான்கு விழுக்காட்டு கட்டணத்தை மட்டுமே அவர்கள் செலுத்த வேண்டும். எஞ்சிய நான்கு விழுக்காட்டுத் தொகையை அவர்கள் தங்கள் சேமிப்பு கணக்கில் வைத்து அவசர வேளைகளில் பயன்படுத்திக் கொள்ள இயலும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக் கிழமை தாக்கல் செய்த 2022 வரவு செலவுத் திட்டத்தின் போது ஹிஜ்ரா வர்த்தக கடனுதவி அறவாரியத்தை சீரமைப்பது தொடர்பான எட்டு திட்டங்களை மந்திரி புசார் வெளியிட்டார்.

முப்பதாயிரம் வெள்ளிக்கும் குறைவாக கடனுதவி பெற்றவர்களுக்கான நிர்வாக கட்டணத்தை எட்டு விழுக்காட்டிலிருந்து நான்கு விழுக்காடாக குறைப்பதும் அத்திட்டங்களில் ஒன்றாகும்.


Pengarang :