ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

அடுத்தாண்டு முதல் 700 சிறார்களுக்கு சம சத்துணவு வழங்கப்படும்- டாக்டர் சித்தி மரியா

ஷா ஆலம், நவ 28- சம சத்துணவு பெறும் சிறார்களின் எண்ணிக்கை 500 இல் இருந்து அடுத்தாண்டு 700 ஆக அதிகரிக்கப்படும் என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

சம சத்துணவைப் பெறுவதிலிருந்து யாரும் விடுபடக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் இத்திட்டத்தில் கூடுதலாக 200 சிறார்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக  அவர் கூறினார்.

இதன் மூலம் சிறார்கள் மத்தியில் காணப்படும் வளர்ச்சி குறைபாட்டை களைய முடியும் என்று சிலாங்கூர் கினிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

“அனாக் சிலாங்கூர் அனாக் சேஹாட்“ (அசாஸ்) எனும் இத்திட்டம் இவ்வாண்டு தொடக்கப்பட்டது. தகுதி உள்ள சிறார்களுக்கு பால் மற்றும் சம சத்துணவு இத்திட்டத்தின் வழி வழங்கப்படுகிறது என்றார் அவர்.

வளர்ச்சி குன்றிய மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள சிறார்களுக்கான இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவோரின் எண்ணிக்கையை 500 லிருந்து 700 ஆக உயர்த்தியுள்ளோம். என்றும் அவர் சொன்னார்.

சுகாதாரத் துறைக்கு அடுத்தாண்டில் 6 கோடியே 50 லட்சம் வெள்ளி ஒதுக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த வெள்ளியன்று 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது கூறியிருந்தார்.

இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறைக்கு 5 கோடியே 65 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த மானியத்திலிருந்து பத்து லட்சம் வெள்ளி அசாஸ் திட்டத்திற்கு ஒதுக்கப்படும். இதன் வழி 700 சிறார்கள் 10 மாதங்களுக்கு சமசத்துணவைப் பெறுவர்.


Pengarang :