ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

வெ. 20 லட்சம் ஒதுக்கீட்டில் சிலாங்கூர் பொது தரவு முறை அறிமுகம்

ஷா ஆலம், நவ 29– சிலாங்கூரில் பொது தரவு முறையை மேம்படுத்த 20 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

சேவை வழங்கல் முறையை மேம்படுத்துவது மற்றும் பொது தரவு முறையை நிகழ் காலத்தில் பகிர்ந்து கொள்வது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

விவேக மாநிலத்திற்கான அடித்தளமாக இது விளங்குகிறது. அதே சமயம், வரும் 2025 ஆம் ஆண்டு வாக்கில் தென்கிழக்காசியாவில் தலை சிறந்த விவேக மாநிலமாக சிலாங்கூரை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையிலும் இத்திட்டம் மேம்படுத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த பொது தரவு முறையின் கீழ் மாநில அரசு கொள்கைகளை துல்லியமாகவும் மேலும் ஆக்கக்கரமான முறையிலும் உருவாக்க முடியும் என்று இவர் தெரிவித்தார்.

தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிலாங்கூர் இணைய பாதுகாப்பு பிரிவை உருவாக்க மாநில அரசு 10 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பொது மக்களின் பாதுகாப்புக்காக ஸ்மார்ட் சிலாங்கூர் திட்டத்தின் கீழ் 50 லட்சம் வெள்ளி செலவில்  கூடுதலாக 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

தற்போது இத்திட்டத்தின் கீழ் 414 கேமராக்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :