ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

விவேக மாநில தொலைநோக்குத் திட்டம் வெ. 31.6 கோடி செலவில் அமலாக்கம்

ஷா ஆலம், நவ 29- சிலாங்கூரை வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் விவேக மாநிலமாக உருவாக்கும் தொலைநோக்கு திட்டத்திற்காக  2022 வரவு செலவுத் திட்டத்தில் 31 கோடியே 60 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஸ்மார்ட் சிலாங்கூர் திட்டம் மற்றும் இலக்கவியல்மயத் திட்டம் ஆகியவை கோவிட்-19 பெருந்தொற்றை விரைவாகவும் திறனுடனும்  எதிர்கொள்வதில் மாநில அரசுக்கு உதவியதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இலக்கவியலை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களை அமல்படுத்திய முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது. செலங்கா எனப்படும் பாதுகாப்பான முறையில் பொது இடங்களுக்குச் செல்வதை உறுதி செய்யும் செயலி, பிளாட்ஸ் மற்றும் இ-பஸார் ஆகியவை அவற்றில் அடங்கும் என்றார் அவர்.

உதாரணத்திற்கு இ-பஸார் திட்டத்தின் மூலம் 211,928 வணிகர்கள் மின் வணிகம் மூலம் 10 கோடியே 50 ஆயிரம் வெள்ளியை ஈட்டுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தியது என்று அவர் குறிப்பிட்டார்.

வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் சிலாங்கூரை விவேக மாநிலமாக்கும் இலக்கை அடைவதற்காக ஸ்மார்ட் சிலாங்கூர் நடவடிக்கைத் திட்டம் வரையப்பட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

இந்நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளில் சுமார் 60 விழுக்காடு நிறைவேற்றம் கண்டு விட்டதை ஸ்மார்ட் சிலாங்கூர் டெலிவரி யூனிட் எனப்படும் விநியோகப் பிரிவின் அறிக்கை கூறுகிறது என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :