ECONOMYNATIONALPBTSELANGOR

அடுத்தாண்டில் ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்படும்

ஷா ஆலம், நவ 30– அடுத்தாண்டில் விளையாட்டு தொடர்புடைய 60 திட்டங்கள் புனரமைப்பு செய்யப்படும் அதே வேளையில் ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றத்தின் நிர்வாக இயக்குநர்  முகமது நிஸாம் மர்ஜூக்கி கூறினார்.

நாற்பது லட்சம் வெள்ளி கூடுதல் ஒதுக்கீட்டைக் கொண்டு புட்சால், பூப்பந்து, கைப்பந்து, மற்றும் செப்பக்தக்ராவ் விளையாட்டு திடல்கள் சீரமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கைவசம் உள்ள நிதி போதுமானதாக இல்லாத நிலையில் மாநில அரசின் இந்த ஒதுக்கீடு எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. நிறைய சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று அவர் சொன்னார்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் குறிப்பாக கிராமங்களில் உள்ள சீரமைப்பு செய்ய வேண்டிய நிலையிலுள்ள விளையாட்டு வசதிகளை முதலில் அடையாளம் காணவிருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டில் இருபது லட்சம் வெள்ளி செலவில் விளையாட்டு வசதிகளை தரம் உயர்த்தும் 40 திட்டங்களை தாங்கள் மேற்கொண்டதாகவும் அவற்றில் பெரும்பாலானவை முழுமையடைந்து விட்டதாகவும் அவர் கூறினார்.

விளையாட்டு வசதிகளை நிர்மாணிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிக்காக அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில் 40 லட்சம் வெள்ளி ஒதுக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.


Pengarang :