ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வறுமை ஒழிப்பு புளுப்ரிண்ட் பெருந்திட்டத்தின் வழி 2,642 பேர் பயன் பெற்றனர்- கணபதிராவ்

ஷா ஆலம், டிச 1– கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் புளுப்ரிண்ட்  வறுமை ஒழிப்பு பெருந்திட்டத்தின் மூலம் 2,642 பேர்  பயனடைந்துள்ளனர். குறைந்த வருமானம் பெறுவோர் தங்கள் வர்த்தத்தை விரிவாக்கம் செய்வதற்கு உதவும் இத்திட்டத்திற்காக மாநில அரசு இதுவரை 1 கோடி வெள்ளியைச் செலவிட்டுள்ளது.

மாவட்ட மற்றும்  நில அலுவலகங்கள் வாயிலாக விண்ணப்பம் செய்வோருக்கு வர்த்தக பயன்பாட்டிற்கான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் வழங்கப்படுவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளதாக சமூக பொருளாதார மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

உலு லங்காட் மாவட்டத்தில் மட்டும் 212 பேரின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதாக கூறிய அவர், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டத் தொகை 902,450 வெள்ளியாகும் என்று மாநில சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் வாயிலாக சட்டமன்றத் தொகுதிகள் ரீதியாக பயன்பெற்றவர்கள் எண்ணிக்கை குறித்து செமினி உறுப்பினர் ஜக்காரியா ஹனாபி கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் பொருள் வாங்கும் பணிகள் மாவட்ட மற்றும் நில அலுவலங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுவதால் பங்கேற்பாளர்கள் குறித்த துல்லியமான விபரங்கள் கைவசம் இல்லை என்று கணபதிராவ் தெரிவித்தார்.

இத்திட்டம் மாவட்ட மற்றும் நில அலுவலகம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்களைப் பெறுவது மற்றும் பரிசீலிப்பது ஆகிய பணிகளை அவ்விலாகாவே மேற்கொள்கிறது. விண்ணப்பதாரர்களின் பின்னணி ஆராயப்பட்டப் பின்னர் அந்த விண்ணப்பங்கள் தொடர்பில் தேர்வுக் குழுவின் கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகின்றன என்றார் அவர்.

 


Pengarang :