ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

பண்டார் செளஜானா புத்ரா மேம்பாலம் அடுத்தாண்டு மே மாதம் முற்றுப் பெறும்

ஷா ஆலம், டிச 3- கோவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக தடைபட்ட பண்டார் செளஜானா புத்ரா மேம்பாலத் திட்டம் அடுத்தாண்டு மே மாதம் பூர்த்தியாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். 

கடந்த செப்டம்பர் மாதம் பூர்த்தியாக வேண்டிய இத்திட்டம் அரசாங்கம் நிர்ணயித்த எஸ்.ஒ.பி. விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய காரணத்தால் தாமதமடைந்ததாக அவர் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அமல் படுத்தப்பட்ட பல்வேறு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகள் காரணமாக பண்டார் செளஜானா புத்ரா மேம்பாலத் திட்டத்தை அமல் படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டது என்றார் அவர்.

எஸ்.ஒ பி. விதிகளை கடைபிடிக்க வேண்டிய நிர்பந்தத்தினால் குத்தகையாளரால் பணிகளை திட்டமிட்ட காலத்தில் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும், தொழிலாளர்கள் எண்ணிக்கை கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்களுக்கு மட்டுமே வேலை செய்ய அனுமதி போன்ற நிபந்தனைகளும் இத்திட்டத்தை தாமதப் படுத்தின என்று அவர் குறிப்பிட்டார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று அந்த மேம்பாலத் திட்டம் குறித்து பந்திங் உறுப்பினர் லாவ் வேங் சான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பண்டார் செளஜானா புத்ரா வட்டாரத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ஆறு கோடி வெள்ளி செலவில் மேம்பாலம் நிர்மாணிக்கப்படும் என்று மந்திரி புசார் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கூறியிருந்தார்.

Pengarang :