K
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சாலைக் குற்றங்களுக்கு 80 விழுக்காடு வரை அபராதக் கழிவு- போலீஸ் அறிவிப்பு

ஷா ஆலம், டிச 8- தேர்ந்தெடுக்கப்பட்ட குற்றப் பதிவுகளுக்கு குறைந்த பட்சம் 30 வெள்ளியுடன் கூடிய 80 விழுக்காட்டு அபராதக் கழிவை காவல் துறை வழங்குகிறது. இந்த சலுகை நாளை 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அவர்களால் தொடக்கி வைக்கப்படவிருக்கும் மலேசிய குடும்ப உணர்வின் 100 நாள் நிறைவையொட்டி இந்த அபராதக் கழிவு வழங்கப்படுவதாக சாலை போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்தோ வீரா மாட் காசிம் கூறினார்.

குற்றப்பதிவுகளுக்கான அபராதத் தொகையை கோலாலம்பூர் மாநாட்டு மைய போலீஸ் முகப்பிடம், மாநில மற்றும் மாவட்ட போலீஸ் தலைமையகங்களில் உள்ள சாலை போக்குவரத்து அபராத முகப்பிடங்களில் செலுத்தலாம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நான்கு நாள் சலுகை காலத்தின் போது மைபாயார் அகப்பக்கம் அல்லது செயலி வாயிலாகவும் அபராதம் செலுத்தலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

எனினும், விபத்தில் சம்பந்தப்பட்டது, அவசர தடங்களைத் பயன்படுத்தியது, ஆபத்தான முறையில் வாகனங்களை முந்திச் சென்றது, சமிக்ஞை விளக்கை மீறிச் சென்றது போன்ற குற்றங்களுக்கு அபராதக் கழிவு வழங்கப்படாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இது தவிர, இரட்டைக் கோடுகளில் முந்திச் சென்றது, அபராதம் விதிக்கப்பட முடியாதவை என வகைப்படுத்தப்பட்ட குற்றங்கள், கனரக வாகனங்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள், புகைப்போக்கியை மாற்றியமைத்த குற்றங்கள் போன்றவை இந்த சலுகையில் இடம் பெறாது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :