ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

பராமரிப்பு செலவினங்களை ஈடுகட்டுவதில் கூட்டு நிர்வாக மன்றங்களுக்கு மாநில அரசு உதவி

ஷா ஆலம், டிச 8- அடுக்குமாடி குடியிருப்புகள் குறிப்பாக குறைந்த விலை வீடுகளுக்கான பராமரிப்பு செலவினங்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூட்டு நிர்வாக மன்றங்களுக்கு மாநில அரசு தொடர்ந்து உதவி வருகிறது.

பிரச்சனைக்குரிய அடுக்குமாடி குடியிருப்புகளின் கூட்டு நிர்வாக மன்றங்களை சமூக விவசாயத் திட்டத்தில் ஈடுபடுத்துவது மாநில அரசின் உதவித் திட்டங்களில் ஒன்றாக விளங்குவதாக வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

இத்தகைய விவசாயத் திட்டங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அவை பராமரிப்பு செலவினங்களை ஈடுசெய்ய முடியும் என்று அவர் சொன்னார்.

எனினும், அடுக்குமாடி குடியிருப்புகள் குறிப்பாக மலிவு விலை வீடுகளை பராமரிப்பது தொடர்பில் கூட்டு நிர்வாக மன்றங்களுக்கு உதவி வழங்குவதற்கான சிறப்புத் திட்டம் எதனையும் மாநில அரசு தற்போதைக்கு கொண்டிருக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

கூட்டு நிர்வாக மன்றத்திடம் அதிகாரம் ஒப்படைக்கப்படாத பட்சத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளைப் பராமரிக்கும் பொறுப்பை மேம்பாட்டாளரே ஏற்க வேண்டும் என்று 757 வது சட்டத்தின் பிரிவு 9(1) கூறுகிறது.  குடியிருப்பில் உள்ள உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தைக் கொண்டு கூட்டு நிர்வாக மன்றம் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று பிரிவு 21(1) இல் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் இன்று கோத்தா டாமன்சாரா உறுப்பினர் ஷதிரி மன்சோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

அடுக்குமாடி குடியிருப்புகளை பராமரிப்பது அல்லது பழுதுபார்ப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள உதவுவது தொடர்பில் மாநில அரசு கொண்டுள்ள கொள்கை குறித்து அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

 


Pengarang :