ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONAL

வர்த்தக உரிமத்தை புதுப்பிக்க நடமாடும் முகப்பிடச் சேவை- எம்.பி.பி.ஜே. ஏற்பாடு

பெட்டாலிங் ஜெயா, டிச 9 - வணிகர்கள் தங்கள் வர்த்தக உரிமத்தைப்  புதுப்பித்துக் கொள்ள வசதியாக பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம்  எட்டு பேரங்காடிகளில் நடமாடும் முகப்பிடச் சேவையை திறந்துள்ளது.

நவம்பரில் தொடங்கப்பட்ட அச்சேவை டிசம்பர் 31 வரை செயல்படும் என்று டந்தோ பண்டார் முகமது அஸ்லான் முகமது ஆரிப் கூறினார்.

இந்த முகப்பிடங்களில் இலக்கவியல் மயமாக்கல் தொடர்பான பயிற்சிகளும் வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

வர்த்தகர்கள் பணத்தைச் செலுத்தும் போது  இணையம்  வாயிலாக​​ எவ்வாறு கட்டணம் செலுத்துவது என்பதை நாங்கள் அவர்களுக்குச் சொல்லித் தருவோம்.
இதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில்  எளிதான முறையில் கட்டணங்களைச் செலுத்தலாம் என்றார் அவர்.

கோவிட்-19 நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்க இலக்கவியல் மயமாக்கும் நடவடிக்கைகளை மாநகர் மன்றம் மேலும் அதிகளவில் மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

இந்த நடமாடும் முகப்பிடச் சேவை இகானோ பவர் சென்டர், பேரடைம் மால், ஒன் உத்தாமா பேரங்காடி மற்றும் தி கெர்வ் ஆகிய விற்பனை மையங்களிலும் செயல்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், டிசம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் 3 டாமன்சாராவிலும் டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் ஜெயா ஷாப்பிங் சென்டரிலும், டிசம்பர் 30 மற்றும் 31 ஆம் தேதி ஆம்கார்ப் மாலில் இச்சேவை வழங்கப்படும்.

வணிகத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் தங்கள் உரிமங்களை புதுப்பிப்பதை எளிதாக்கும் வகையில் ஏழு இரவு சந்தைகள் மற்றும் மூன்று காலைச் சந்தைகளிலும் இச்சேவை வழங்கப்படவுள்ளதாக அஸான் கூறினார்.

Pengarang :