ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

பொழுதுபோக்கு வரிக்கு விலக்களிப்பு – சிலாங்கூர் அரசுக்கு வெ.5 கோடி இழப்பு

ஷா ஆலம், டிச 9- இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் பொழுதுபோக்கு வரிக்கு வழங்கப்பட்ட முழு விலக்களிப்பு காரணமாக சிலாங்கூர் அரசு 5 கோடி வெள்ளி வருமானத்தை இழந்தது.

மாநில ஆட்சிக்குழு எடுத்த இந்த முடிவு காரணமாக மாநில அரசின் வருமானத்திற்கு கடும் விளைவை ஏற்படுத்தியதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“பொழுதுபோக்கு வரி தொடர்பில் விளக்களித்த ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில், திரையரங்குகள் செயல்படாதது உள்ளிட்ட காரணங்களால் 5 கோடி வெள்ளிக்கும் மேல் நமக்கு இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பு மாநிலத்தின் வருமானத்திற்கு எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கும்“ என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் நேற்று 2022 ஆம் ஆண்டிற்கான மேம்பாட்டுச் செலவினம் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக சட்டமன்றத்தில்  பேசிய இங் ஸீ ஹான், ஒன்பது மாதங்களுக்கு பொழுது போக்கு வரி விதிப்பதிலிருந்து முழுமையாக விலக்களிப்பதற்கு கடந்தாண்டு நவம்பர் 24 ஆம் தேதி நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக கூறினார்.

கடந்த 2020 மார்ச் 18 முதல் இவ்வாண்டு டிசம்பர் 31 வரை மாநிலத்திலுள்ள அனைத்து பொழுது போக்கு சுற்றுலா மையங்களிலும் நுழைவுக் கட்டணத்திற்கு வரி விதிப்பதிலிருந்து விலக்களிக்க மாநில அரச கடந்த பிப்ரவரி  2 ஆம் தேதி ஒப்புக் கொண்டது.

 


Pengarang :