ALAM SEKITAR & CUACAGALERIPBTSELANGOR

கிள்ளானில் 50 லட்சம் வெள்ளி செலவில் கலாசார கிராமம் உருவாக்கப்படும்

ஷா ஆலம், டிச 9- சிலாங்கூரில் கலாசார கிராமத்தை உருவாக்குவதற்கு மாநில அரசு 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. இம்மாநிலத்தின் வரலாறு, கலாசாரம் மற்றும் பல்வேறு இனங்களின் வரலாற்றை விவரிக்கும் வழிகாட்டி மையமாக இது அமையும்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியினால் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட இந்த திட்டம் கிள்ளான் ஆற்றோரம் அமையவிருக்கும் சிலாங்கூர் கடல் நுழைவாயில் திட்டத்தின் ஒரு பகுதியாக அமையும் என்று கலாசாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் புர்ஹான் அமான் ஷா கூறினார்.

இந்நோக்கத்திற்காக கிள்ளான் நகரின்  மையப்பகுதியில் கிள்ளான் ஆற்றோரம் 35 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. பல்வேறு கவர்ச்சிகமான அம்சங்களை உள்ளடக்கிய இத்திட்டத்தின் அமலாக்கத்திற்கு 50 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று சிலாங்கூர் கலாசாரம் மையம் அமையவிருக்கும் இடம் மற்றும் செலவினம் குறித்து கோல குபு பாரு உறுப்பினர் லீ கீ ஹியோங் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிலாங்கூர் கலாசார பிரிவு 13.26 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருக்கும் என்பதோடு அது ஆறு, சாலை மற்றும் பூங்கா என மூன்று மண்டலங்களைக் கொண்டிருக்கும் என்று புர்ஹான் கூறினார்.

ஒன்பது ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட சிலாங்கூர் கலாசார மையத்திற்கு பொதுமக்கள் செல்ல விஷேச  சாலை வசதி ஏற்படுத்தப்படும். அந்த பூங்காவின் நீளம் சுமார் 1.25 கிலோமீட்டராகும் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :