ALAM SEKITAR & CUACAPBTSELANGOR

மேரு தொகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட 49 குடும்பங்களுக்கு எம்.பி.ஐ. நிதியுதவி

கிள்ளான், டிச 14- இவ்வாண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்ட மேரு வட்டாரத்தைச் சேர்ந்த 49 குடும்பங்களுக்கு எம்.பி.ஐ.எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகத்தின் சார்பாக தலா 300 வெள்ளி உதவித் தொகை வழங்கப்பட்டது.

புயலால் பழுதடைந்த வீடுகளைச் சரிசெய்வதில் ஏற்பட்ட செலவுகளால் பெரும் சுமையை எதிர்நோக்கியிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிதியுதவி ஓரளவு உதவியாக இருக்கும் என்று மேரு சட்டமன்ற உறுப்பினர் முகமது ஃபக்ருள்ராஸி முகமது மொக்தார் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினராவர். இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டு  பெரும் சுமையை எதிர்நோக்கியிருக்கும் அவர்களுக்கு உதவுவது நமது கடமையாகும் என்றார் அவர்.

இந்த உதவித் திட்டத்தை அமல்படுத்துவற்கு எம்.பி.ஐ. 15,000 வெள்ளியைச் செலவிட்டது. இதற்கு முன்னர் சம்பவம் நிகழ்ந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை உடனடியாக சரி செய்வதற்கு 20,000 வெள்ளி செலவிடப்பட்டது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது தவிர மாவட்ட பேரிடர் நிதியின் வாயிலாக அவர்களுக்கு உதவி வழங்கப்பட்டதாக கூறிய அவர், வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கேற்ப உதவித் தொகையின் அளவு மாறுபட்டிருந்தது என்று அவர் சொன்னார்.

கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி ஏற்பட்ட கடும் புயல் மழையில் மேரு வட்டாரத்திலுள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 80 வீடுகள் சேதமடைந்தன. எனினும் இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் அல்லது உயிருடற்சேதம் ஏற்படவில்லை.


Pengarang :