ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

மலேசியாவில் இரண்டாவது சம்பவம் – எட்டு வயது சிறுமிக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி

ஷா ஆலம், டிச 16- நாட்டில் எட்டு வயது சிறுமியை உட்படுத்திய ஒமிக்ரோன் வகை நோய்த் தொற்று சம்பவம் பதிவாகியுள்ளதை சுகாதார அமைச்சு இன்று உறுதிப்படுத்தியது.

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் தன் குடும்பத்தினருடன் வசித்து வரும் அச்சிறுமிக்கு நோய்த் தொற்று கண்டிருப்பது இம்மாதம் 14 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

அச்சிறுமி தன் குடும்பத்தினருடன் கட்டார் நாட்டின் டோஹாவில் வழிமாற்றுப் பயணம் மேற்கொண்டு கடந்த 5 ஆம் தேதி மலேசியா வந்ததாக புத்ரா ஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

இம்மாதம் 6 முதல் 10 ஆம் தேதி வரை மலேசியா திரும்பியவர்களில் நோய்த் தொற்று கண்டறியப்பட்ட 52 பேரிடம் ஐ.எம்.ஆர். எனப்படும் மருத்துவ ஆய்வுக் கழகம் நடத்திய  பி.சி.ஆர். மரபுசார் வடிவ சோதனையில் அந்த ஒமிக்ரோன் வகை தொற்று கண்டறியப்பட்டதாக அவர் சொன்னார்.

அவற்றில் ஒரு மாதிரி மட்டும் ஒமிக்ரோன் வகை தொற்றுக்கான சாத்தியத்தைக் கொண்டிருந்தது. அந்த மாதிரி மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் ஆய்வின் மூலம் கடந்த 14 ஆம் தேதி நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது என்றார் அவர்.

இதனுடன் சேர்ந்து நாட்டில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளதாக கூறிய அவர், அவை இரண்டுமே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியானவை என்றார்.


Pengarang :