ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

பள்ளி உபகரண விநியோகத் திட்டத்திற்கு கே.டி.இ.பி.டபள்யூ.எம். வெ.30,000 ஒதுக்கீடு

பூச்சோங், டிச 18- அடுத்தாண்டில் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருள்களை வழங்குவதற்காக கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் பெர்ஹாட் நிறுவனம் 30,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

கின்ராரா, ஸ்ரீ செத்தியா, சிகிஞ்சான் ஆகிய தொகுதிகளில் உள்ள 200 ஆதரவற்ற மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தின் வாயிலாகப்  பயன் பெறுவர் என்று அந்நிறுவனத்தின் நடவடிக்கைப் பிரிவு தலைமை நிர்வாகி முகமது இடரிஸ் முகமது யூசுப் கூறினார்.

தற்போதைக்கு இந்த மூன்று தொகுதிகளில் இத்திட்டத்தை அமல்படுத்தவுள்ளோம். மற்ற தொகுதிகளிலிருந்து விண்ணப்பம் கிடைக்கும் பட்சத்தில் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
அடுத்தாண்டில் பள்ளித் தவணையை தொடக்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கு இந்த உதவி உத்வேகத்தை அளிக்கும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

கின்ராரா எம்.பி.எஸ்.ஜே. சமூக மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கின்ராரா தொகுதியைச் சேர்ந்த 64 ஆதரவற்றச் சிறார்களுக்கு உதவிப் பொருள்களை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
இநநிகழ்வில் ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹானும் கலந்து கொண்டார்.

எதிர் வரும் காலங்களில் மாணவர்கள் மத்தியில் சுற்றுசூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நடவடிக்கைகளை தாங்கள் தீவிரமாக மேற்கொள்ளவுள்ளதாக முகமது இட்ரிஸ் கூறினார்.

மாணவர்கள் மத்தியில் தூய்மையின் முக்கியத்துவத்தை 
உணர்த்துவதும் தங்கள் நிறுவன சமூக கடப்பாட்டின் ஒரு பகுதியாக விளங்குகிறது என்றார் அவர்.

Pengarang :