Dato’ Menteri Besar, Dato’ Seri Amirudin Shari (tengah) bergambar bersama penduduk selepas menyerahkan sumbangan ketika meninjau keadaan selepas banjir di Taman Maznah, Klang pada 25 Disember 2021. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

செந்தோசா தொகுதியில் 1,500க்கும் மேற்பட்டோர் வெள்ள நிவாரண நிதிக்கு விண்ணப்பம்

கிள்ளான், டிச 26- செந்தோசா தொகுதியைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 1,000 வெள்ளி வெள்ள உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்துள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக விண்ணப்பம் செய்வதற்கு ஏதுவாக தாங்கள் நேரில் சென்று அவர்களிடம் விண்ணப்ப பாரங்களை வழங்கி வருவதாக  அவர் சொன்னார்.

அவர்கள் விண்ணப்ப பாரத்தை பூர்த்தி செய்தவுடன் நான் அதில் உடனடியாக கையெழுதிட்டு அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக மாவட்ட நில அலுவலகத்திடம் ஒப்படைக்கிறோம் என்றார் அவர்.

நிதியுதவி தொடர்பான அறிவிப்பை மாநில அரசு கடந்த செவ்வாய்கிழமை வெளியிட்டது முதல் நாங்கள் விண்ணப்ப பாரங்களை வெளியிட ஆரம்பித்து விட்டோம். இத்தகைய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் முதல்  அலுவலகமாக கிள்ளான் மாவட்ட நில அலுவலகம் விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியுடன் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாமான் மஸ்னா, தாமான் செந்தோசா பகுதிகளைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இத்தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை நான்காயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக இந்த உதவி நிதிக்கு விண்ணப்பம் செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சிலாங்கூர் அரசு 10 கோடி வெள்ளி ஒதுக்கீட்டில் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தை கடந்த செவ்வாய்க்கிழைமை அறிவித்தது.


Pengarang :