ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

வெ.1,000 வெள்ள நிவாரண நிதி விரைவில் வழங்கப்படும்-மந்திரி புசார்

கிள்ளான், டிச 26- மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 1,000  வெள்ளி உதவித் தொகை வெகு விரைவில் வழங்கப்படும் என்று  மந்திரி புசார் கூறினார்.

இந்த நிதியுதவி தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவருக்கு இரு வாரங்களுக்குள் உதவி கிடைக்கும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வரும்  திங்கட்கிழமை முதல்  பாதிக்கப்பட்ட மக்களிடம் தரவுகளைச் சேகரிக்கும் பணியில் கவனம் செலுத்துவோம். முடிந்தவரை விரைவில் நிதியுதவி வழங்க முயற்சிப்போம் என்று அவர் சொன்னார்.

இந்தப் பணி  சிலாங்கூர் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களை உள்ளடக்கியுள்ளதால் இது முழுமை பெறுவதற்கு சிறிது நேரம் எடுக்கும். கூடிய விரைவில் ரொக்கமாகவோ அல்லது நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கிலோ உதவித் தொகையைச் சேர்க்க நடவடிக்கை எடுப்போம்  என்றார் அவர்.

நேற்று தாமான் மஸ்னா மற்றும் தாமான் செந்தோசா ஆகிய இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உதவித் தொகையை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த வாரம் மாநிலத்தின் பல மாவட்டங்களில்  வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 10 கோடி வெள்ளி நிதியில்  "சிலாங்கூர் பாங்கிட்" திட்டத்தை மாநில அரசு அறிவித்தது.

இந்த சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 10,000 வெள்ளியும்   
சேதமடைந்த வீடுகள் மற்றும் பொருட்களை சரி செய்வதற்காக குடும்பத்திற்கு 1,000 வெள்ளியும் வழங்கப்படும்.

Pengarang :