ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

நிலச் சரிவால் பாதிக்கப்பட்ட பூர்வக்குடியினர் கிராமத்தை மந்திரி புசார் பார்வையிட்டார்

உலு லங்காட், டிச 29- நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட இங்குள்ள கம்போங் பெராஸ் பூர்வக்குடியினர் கிராமத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று பார்வையிட்டார்.

மோட்டார் சைக்கிளில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வந்த மந்திரி புசாருக்கு கள நிலவரம் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

வெள்ளம் காரணமாக தொடர்பு துண்டிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்குவதற்காக மலையேறிகள் மற்றும் தீயணைப்பு வீரர்களை சம்பந்தப்பட்ட பகுதிக்கு மந்திரி புசார் அனுப்பினார்.

அங்குள்ள குடியிருப்பாளர்களிடம் உரையாற்றிய மந்திரி புசார், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இக்கிராம மக்களுக்கு இரண்டாவது முறையாக உதவிப் பொருள்கள் வழங்கப்படுவதாக கூறினார்.

முழு ஈடுபாட்டுடன் பணியாற்றி வரும் மாநில பேரிடர் நிவாரண குழுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நிலச்சரிவு அபாயம் உள்ள 20 முதல் 30 இடங்களைக் கடந்து அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தை அடைந்துள்ளனர் என்றார் அவர்.

அப்பகுதியில் மண் உறுதியற்றதாக உள்ளதால் நிலச்சரிவு அபாயத்தை கருத்தில் கொண்டு தன்னார்வலர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் இந்த மனிதாபிமான நடவடிக்கையின் போது விபத்துகளை தவிர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்..


Pengarang :