ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

ஐந்து மாநிலங்களில் 54 பேர் வெள்ளத்திற்கு பலி- இருவரைக் காணவில்லை

கோலாலம்பூர், ஜன 6– நாடு முழுவதும் வெள்ளத்திற்கு 54 பேர் இதுவரை பலியாகியுள்ள நிலையில் மேலும் இருவரை இன்னும் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூரில் மிக அதிகமாக அதாவது 25 பேர் வெள்ளத்திற்கு பலியாகியுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறையின் இயக்குநர் டத்தோ ஹசானி கசாலி கூறினார்.

சிலாங்கூருக்கு அடுத்து பகாங்கில் 21 பேரும் கிளந்தானில்  நால்வரும் சபாவில் மூவரும் நெகிரி செம்பிலானில் ஒருவரும் இந்த வெள்ளப் பேரிடரில் உயிரிழந்ததாக அவர் சொன்னார்.

வெள்ளம் தொடர்பில் நேற்று நண்பகல் 12,00 மணி வரை நாடு முழுவதும் 13,322 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெள்ளத்தினால் இதுவரை ஏழு மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 172 தற்காலிக துயர் துடைப்பு மையங்கள் அங்கு இன்னும் செயல்பட்டு வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இத்தகவலை வெளியிட்டார்.

சிகமாட்டில் வெள்ள நிலவரம் குறித்து கருத்துரைத்த அவர், அங்கு மோசமான வெள்ளம் காரணமாக அங்குள்ள நான்கு கிராமங்களில் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாக சொன்னார்.

அப்பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு உதவுவதற்காக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுகிறது என்றார் அவர்.


Pengarang :