ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

மாநில முழுவதும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.பி.ஐ. வெ.28 லட்சம் நிதியுதவி

ஷா ஆலம், ஜன 12- சிலாங்கூரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம் 28 லட்சம் வெள்ளியைச் செலவிட்டுள்ளது.

எம்.பி.ஐ. துணை நிறுவனங்களிடமிருந்து திரட்டப்பட்ட 13 லட்சம் வெள்ளித் தொகை மாநில அரசின் தாபோங் இக்தியார் சிலாங்கூர் பங்கிட் திட்டத்திற்காக ஒப்படைக்கப் பட்டதாக அதன் தலைமை செயல்முறை அதிகாரி நோரித்தா முகமது சீடேக் கூறினார்.

மேலும் 15 லட்சம் வெள்ளி நிவாரணத் தொகையாக வழங்குவதற்கும் உணவு, சுத்தப்படுத்தும் உபகரணங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கும் பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைப்பதற்கும் அவர்கள் இந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்கும் இந்த உதவி ஓரளவு துணை புரியும் என்று தாம் நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது தவிர வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாப்போர் ஏசான் திட்டத்தின் கீழ் உணவுகளை தயாரித்து அளிக்கும் பணியையும் எம்.பி.ஐ. பணியாளர்கள் மேற்கொண்டது என அவர் சொன்னார்.

கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு இந்த உணவு விநியோகத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.

 

இத்திட்டத்தின் வழி 14,000 உணவுப் பொட்டலங்கள் தாமான் ஸ்ரீ மூடா, பாடாங் ஜாவா, பூச்சோங் ஆகிய பகுதிகளில் உள்ள  துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தவர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

 

Pengarang :