ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

கோத்தா கெமுனிங் தொகுதியில் 1,366 பேருக்கு வெள்ள உதவி நிதி வழங்கப்பட்டது

ஷா ஆலம், ஜன 13- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோத்த கெமுனிங் தொகுதியைச் சேர்ந்த 1,366 பேர் சிலாங்கூர் அரசின் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 1.000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றனர்.

புக்கிட் லஞ்சோங், லஞ்சோங் ஜெயா மற்றும் தாமான் ஆலம் இண்டா பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3,000 பேரில் இவர்கள் ஒரு பகுதியினராவர் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

வெள்ள நிவாரண நிதிக்கு வந்து சேர்ந்துள்ள அதிகமான விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டியுள்ளதால் இன்னும் உதவித் தொகை கிடைக்காத இத்தொகுதியைச் சேர்ந்த மக்கள் பொறுமை காக்க வேண்டுமாய் அவர் கேட்டுக் கொண்டார்.

வெள்ள பாதிப்பினால் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதை உணர முடிகிறது. எனினும், அனைத்து பாரங்களையும் சரிபார்க்க வேண்டியுள்ளது. மேலும், இந்த பாரங்களை நட்மான எனப்படும் தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பும் ஐ.சி.யு. எனப்படும்  அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவும் இதே ஆவணங்களை பயன்படுத்துகின்றன என்று அவர் சொன்னார்.

ஆகவே, பாதிக்கப்பட்ட மக்கள் பொறுமை காக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். அவர்களுக்கு சேர வேண்டிய உதவிகள் வந்து சேர்வதை நாங்கள் உறுதி செய்வோம் என்றார் அவர்.

சிலாங்கூர் மாநில அரசின் உதவித் தொகையை பெற்ற அந்த 1,366 பேரும் மத்திய அரசின் பந்துவான் வாங் ஏசான் உதவித் தொகையையும் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, அவர்களில் பாதி பேர் 2,500 வெள்ளி மதிப்புள்ள அத்தியாவசியப் பொருளுதவித் திட்டத்தின் வாயிலாக உதவி பெற்றுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த தொகையுடன் சேர்த்து மாநில அரசு மற்றும் மத்திய அரசின் மூலம் 4,500 வெள்ளியை உதவித் தொகையாக அவர்கள் பெறுகின்றனர். வெள்ளத்தில் உடைமைகளை இழந்தவர்களின் சுமையைக் குறைப்பதில் இந்த நிதியுதவி ஓரளவு துணை புரியும் என நம்புகிறோம் என அவர் கூறினார்.


Pengarang :