ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

வெள்ள உதவித் தொகை பெற்றவர்கள் எண்ணிக்கை 31,130 ஆக உயர்வு

ஷா ஆலம், ஜன 14– வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிலாங்கூர் மாநில வழங்கி வரும் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 31,130 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிதியை வழங்குவதற்காக பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 3 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி இதுவரை செலவிடப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பெட்டாலிங் மாவட்டத்தில் 11,236 பேர் 1 கோடியே 12 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளியைப் பெற்ற வேளையில் கிள்ளான் மாவட்டத்தில் 7,376 பேருக்கு 74 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டதாக தனது டிவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

உலு லங்காட் மாவட்டத்தில் 6,457 பேர் 64 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளியைப் பெற்றுள்ளனர். இதுதவிர இந்த பேரிடரில் உயிரிழந்த கிள்ளான் மாவட்டத்தைச் சேர்ந்த அறுவரின் குடும்பங்களுக்கும் சிப்பாங்கை சேர்ந்த மூவரின் குடும்பங்களுக்கும் உலு லங்காட்டை சேர்ந்த இருவரின் குடும்பங்களுக்கும் தலா 10,000 வெள்ளி வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்ட்டுள்ளார்.

கடந்த மாதம் 18 ஆம் தேதி சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் மாநில அரசு 10 கோடி வெள்ளி நிதியில் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தை தொடக்கியது.

 


Pengarang :