ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெள்ளப் பிரச்சனையை பிரதமர் அரசியலாக்கக்கூடாது- சுபாங் ஜெயா உறுப்பினர் வலியுறுத்து

ஷா ஆலம், ஜன 21- சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைப் பாதித்த வெள்ளப் பிரச்சனையை பிரதமர் அரசியலாக்க க்கூடாது என்று சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மாதம் மத்தியில் ஏற்பட்ட அந்த வெள்ளம் தொடர்பில் மலேசிய வானிலை ஆய்வுத் துறையும் எச்சரிக்கை விடுக்கவில்லை என்று மிஷல் இங் மேய் ஸீ தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மாலை மணி 3.45- சிலாங்கூரில் மஞ்சள் பிரிவில் (முன்னெச்சரிக்கை குறியீடு) மழை பெய்யும்- கடுமையாகப் பாதிக்கப்பட்ட பெட்டாலிங், கிள்ளான், உலு லங்காட் மாவட்டங்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

இரவு 11.50 மணி வானிலை அறிக்கை- மழை இல்லை என்று கடந்த மாதம் 17 ஆம் தேதி சமூக ஊடகங்களில் வெளியான வானிலை ஆய்வுத் துறையின் அறிக்கையை அவர் மேற்கோள் காட்டினார்.

டிசம்பர் 18 ஆம் தேதி பலர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருந்த வேளையில் அன்று நண்பகல் 12.00 மணிக்கு வானிலை ஆய்வுத் துறை சிலாங்கூர் மாநிலத்தை மஞ்சள் பிரிவில்தான் வைத்திருந்தது. அதாவது முன்னெச்சரிக்கை, மோசமான கட்டத்தில் இல்லை என்பது இதன் பொருளாகும் என்றார் அவர்.

மக்கள் பிரதிநிதிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு விரைந்து கொண்டிருந்த நிலையில் மார்ச் 18 ஆம் தேதி பிற்பகல் 2.00 மணியளவில் சிலாங்கூர் அபாய பிரிவில் இருப்பதை காட்டும் சிவப்பு சமிக்ஞையை வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டது என்று மிஷெல் மேலும் தெரிவித்தார்.

வெள்ளத்தின் போது மாநில மற்றும் மாவட்ட நிலையில் காணப்பட்ட பலவீனங்கள் காரணமாக மத்திய அரசு தலையிட வேண்டி வந்ததாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியிருந்தது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.


Pengarang :