ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அஸாம் பாக்கி கைது கோரிக்கைக்கு , குரல் கொடுப்பவர்கள் கைதா?

ஷா ஆலம், ஜன 22- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையரை கைது செய்யக் கோரும் பேரணி தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து பங்சார் செல்லும் நான்கு பிரதான சாலைகளில் இன்று காலை 7.00 மணி முதல் போக்குவரத்து வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜாலான் பங்சார், பங்சார் உத்தாமா செல்லும் வழி, ஜாலான் டிராவர்ஸ், ஜாலான் மாரோப், ஜாலான் பங்சார் நோக்கிச் செல்லும் ஜாலான் மாரோப் ஆகியவையே வழிமாற்றம் செய்யப்பட்ட அந்த சாலைகளாகும் என்று சினார் ஹரியான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, இந்த பேரணியை கருத்தில் கொண்டு எல்.ஆர்.டி., எம்.ஆர்.டி., மோனோ ரயில் மற்றும் கேடிஎம் பயணச்சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அமிசிஹிசான் அப்துல் சுக்கோர் கூறினார்.

ஒரு சிலர் இன்று காலை 11.00 மணியளவில் எல்.ஆர்.டி. பங்சார் நிலையத்தில் பேரணியில் ஈடுபடவுள்ளதாக சமூக ஊடகங்கள் வாயிலாக போலீஸ் துறைக்கு தகவல் கிடைக்கப்பெற்றதாக அவர் சொன்னார்.

கோலாலம்பூருக்கு குறிப்பாக பங்சார் பகுதிக்கு இன்று அலுவல் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டவர்கள் தங்கள் பயணத் திட்டத்தை மாற்றியமைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

ஊழல் தடுப்புத் துறையின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கியை கைது செய்யக் கோரி பேரணி நடத்தப்படவுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து இன்று தொடங்கி ஏழு தினங்களுக்கு மாநகரின் முக்கிய இடங்களில் பேரணி நடத்துவதற்கு தடை விதிக்கும் உத்தரவை போலீசார் நேற்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பெற்றனர்.


Pengarang :