ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

உயர்ந்த பட்ச நோய் எதிர்ப்பாற்றலை ஊக்கத் தடுப்பூசி உறுதி செய்யும்- டான்ஸ்ரீ  நோர் ஹிஷாம்

கோலாலம்பூர், ஜன 22- இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்களின் நோய்த் தடுப்பாற்றலை உயர்ந்த பட்ச நிலையில் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்யவே குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்ற சிறிது காலத்திற்கு பிறகு நோய் எதிர்ப்பு சக்தி உடலில் குறைவதை கருத்தில் கொண்டு மூன்றாவது தடுப்பூசியை செலுத்த பரிந்துரைக்கப்படுவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி 20 விழுக்காடு குறைந்துள்ளதை ஐ.சி.ஆர். எனப்படும் மருந்தக ஆய்வுக் கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் சொன்னார்.

ஆயினும், சினோவேக் தடுப்பூசியைப் பெற்றவர்களிடையே மூன்று முதல் ஐந்து மாத இடைவெளியில் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு 40 விழுக்காடு வரை குறைந்துள்ளது கண்டறியப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முழுமையாக தடுப்பூசி பெற்ற மூன்று முதல் ஆறு மாத காலத்தில் கோவிட்-19 நோய்க்கு எதிரான தடுப்பாற்றல் குறைந்து வருவது இஸ்ரேல், இங்கிலாந்து, சிலி போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது இதன் காரணமாக தடுப்பூசி பெற்றவர்கள் குறிப்பாக  நோய்த் தாக்கம் அதிகம் உள்ளவர்கள் மத்தியில் கோவிட்-19 நோய்த் தொற்று பரவுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது என்றார் அவர்.

நேற்று வரை 1 கோடியே 2 லட்சத்து 35 ஆயிரத்து 759 பேர் அல்லது 43.7 விழுக்காட்டினர் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :