ECONOMYHEALTHNATIONALPENDIDIKAN

பத்துமலையில் பக்தர்கள் உதவியுடன் பிரசவம்- மனம் நெகிழ்ந்தார் மலாய் மாது

ஷா ஆலம், ஜன 22– பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் அருகே காரில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென பிரசவ வலி ஏற்பட்ட போது தமக்கு விரைந்து வந்த உதவி புரிந்த பக்தர்களுக்கு மலாய் மாது நன்றி தெரிவித்துக் கொண்டார்.

காரிலேய குழந்தையை ஈன்றெடுத்த போது தமக்கு துணையாக இருந்த பக்தர்களின் பரிவைக் கண்டு நாம் நெகிழ்ந்து போனதாக லிடாவத்தி ஜக்காரியா (வயது 39) கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தின் போது தாம் சுகப்பிரசவம் காண்பதற்கு பெரிதும் உதவிய மேரி புஷ்பம் மற்றும் அவரின் புதல்வி நோராஷினி அருணாசலம் ஆகியோரின் உதவியை ஒரு போதும் மறக்க மாட்டேன் என்று அவர் சொன்னார்.

நிறைய பேர் உதவிக்கு வந்ததைக் கண்டு நான் மனம் நெகிழ்ந்து போனேன். வழிபாட்டிற்கு கொண்டு வந்த உடைகளை எனக்கு கொடுத்து உதவினர். இரத்தம் படும் என்ற போதிலும் போதும் அது பற்றி கவலைப்படாமல் அவர்கள் அத்துணியைக் கொண்டு எனது உடலைப் போர்த்தினர். 

அந்த துணியை (வேஷ்டி) இன்னும்  நான் அச்சம்பவத்தின் நினைவாக வைத்திருக்கிறேன் என்று கிள்ளான் மேருவைச் சேர்ந்த அந்த மாது உவகையுடன் கூறினார்.

அந்த பிரசவ சம்பவத்தை மீண்டும் நினைவுக்கூர்ந்த லிடாவத்தி, தமக்கு பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து கணவருடன் தாம் கோம்பாக் மருத்துவமனைக்கு பயணமானதாக தெரிவித்தார்.

ஆலயம் அருகே வந்த போது எங்கள் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது. காரிலியே குழந்தையை பிரசவிக்க வேண்டிய நிலை ஏற்பட்ட போது தைப்பூசத்திற்கு வந்த பக்தர்கள் உதவிக்கு  விரைந்தோடி வந்தனர்.

மேரியும் நோரோஷினியும் காரி கதவைத் தட்டி எனது நிலை குறித்து விசாரித்தனர். குழந்தையை பிரசவிப்பதாக நான் கூறினேன். அவர்கள் காரின் கதவை திறக்கும்படி கேட்ட போது, விழாவில் பங்கேற்கும் அவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக பரவாயில்லை எனக் கூறி விட்டேன்.

எனினும், அவ்விருவரும் என்னை வற்புறுத்தி காரின் கதவைத் திறக்க வைத்து குழந்தையைப் பிரசவிக்க உதவினர். அவர்கள் தாங்கள் கட்டியிருந்த புடவையைக் களைந்து இரத்தம் தோய்ந்த எனது உடலைப் போர்த்தினர் என்று லிடாவத்தி சொன்னார்.

கடந்த வாரம் தைப்பூசத்தின் போது பத்து மலை அருகே காரில் பயணித்த போது பிரசவ வலி கண்ட மலாய் மாது ஒருவர் உதவியது தொடர்பில் தமிழ்ப்பத்திரிகை நிருபர் ஒருவர் வெளியிட்ட பதிவு  சமூக ஊடகங்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.


Pengarang :