ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTPBT

பெட்டாலிங் ஜெயாவில் டிங்கி சம்பவங்கள் 20 விழுக்காடு குறைந்தன

ஷா ஆலம், பிப் 2- பெட்டாலிங் ஜெயா பகுதியில் கடந்த மாதம் 8 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 60 ஆக குறைந்தது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 75 ஆக இருந்தது.

இக்காலக்கட்டத்தில் டிங்கி காய்ச்சல் தொடர்புடைய மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்படவில்லை என்று பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற டத்தோ பண்டார் முகமது அஸான் முகமது அமிர் கூறினார்.

டிங்கி சம்பவங்கள் அதிகம் பதிவான இடங்களாக பி.கே.யு. 10, பி.ஜே.யு.8 அர்மணி அடுக்குமாடி குடியிருப்பு, எஸ்.எஸ்.4ஏ தொடர் வீட்டுப் பகுதி, எஸ்.எஸ்.3 தொடர் வீட்டுப் பகுதி பி.பி.ஆர். லெம்பா சுபாங் 2 ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

டிங்கி சம்பவங்களை கட்டுப்படுத்துவற்காக வீடு வீடாகச் சென்று சோதனையிடுவது, மருந்து தெளிப்பது போன்ற பணிகளை மாநகர் மன்றம் மேற்கொண்டு வருகிறது என்று அவர் சொன்னார்.

பெட்டாலிங் மாவட்ட சுகாதார இலாகாவுடன் இணைந்து இப்பணிகளை நாங்கள் இரவு வேளைகளில் மேற்கொண்டு வருகிறோம் என அவர் தெரிவித்தார்.

பகலில் மேற்கொள்ளும் சோதனைகளில் 20 விழுக்காடு வரை மட்டுமே இலக்கை அடையும் வேளையில் இரவு நேர நடவடிக்கைளில் 50 வரை இலக்கை அடைய முடிகிறது என்றார் அவர்.

ஏடிஸ் கொசுக்கள் வளரும் இடங்களை அடையாளம் கண்டு அழிக்கும் அதேவேளையில் நீரை சேகரித்து வைக்கும் கலங்கள் எந்நேரமும் மூடி வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யும்படி பொதுமக்களை  அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :