ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் ஏறக்குறைய அனைவரும் வெள்ள உதவி நிதியை பெற்றனர்- மந்திரி புசார்

ஷா ஆலம், பிப் 3– கிள்ளான் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்கள் தவிர்த்து  இதர மாவட்டங்களைச் சேர்ந்த ஏறக்குறைய அனைவரும் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் வெள்ள உதவி நிதியைப் பெற்றனர்.

நிதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பில் தமது தரப்பு புகார்களைப் பெற்றுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

 சம்பந்தப்பட்ட பகுதிகளில் நிதியளிப்பை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பெட்டாலிங் மற்றும் கிள்ளான் மாவட்டங்களில் அதிகமான விண்ணப்பங்களை நாங்கள் பெற்றுள்ளோம். வரிசைப்படி அவர்களுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

நிதி வழங்குவதில் குறிப்பிட்ட அளவு ஆற்றல் மட்டுமே நமக்கு உள்ளது. இதன் காரணமாக, இப்பணியில் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் இப்பணியை விரைவுபடுத்துவோம். விண்ணப்பங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. ஒரு லட்சம் விண்ணப்பங்கள் வரை கிடைத்துள்ள நிலையில் அவற்றை சரிபார்ப்பதற்கு சற்று காலம் பிடிக்கிறது என்றார் அவர்.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு சுங்கை துவா தொகுதியில் உள்ள பிரமுகர்களின் வீடுகளுக்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நேற்று காலை 10 மணி வரை பந்துவான் பங்கிட் சிலாங்கூர் திட்டத்தின் வழி வெள்ள நிவாரண நிதி வழங்க மாநில அரசு 5 கோடியே 50 லட்சத்து 41 ஆயிரம் வெள்ளியைச் செலவிட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் இதுவரை 54,911 குடும்பங்கள் தலா 1,000 வெள்ளி நிதியுதவியைப் பெற்றுள்ளன.


Pengarang :