ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

கிள்ளான் மாவட்டத்தில் 30,000 பேருக்கு வெள்ள உதவி நிதி நாளை முதல் வழங்கப்படும்

ஷா ஆலம், பிப் 3– கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிள்ளான் வட்டாரத்தைச் சேர்ந்த 30,000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நாளை தொடங்கி பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை 14,000 பேர் உதவித் தொகை பெற்றுள்ளதாக கிள்ளான் மாவட்ட அதிகாரி முகமது பைசால் அப்துல் ராஜி கூறினார்.

விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் ஒரே குடும்பத்திலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்தது போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டியுள்ளதால் மற்றவர்கள் பொறுமை காக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

தகுதியுள்ளவர்களுக்கு நிச்சயம் உதவித் தொகை வழங்கப்படும் என்று கிள்ளான் மாவட்ட நில அலுவலகம் உறுதியளித்துள்ளதால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பொறுமை காக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.

இதுவரை 70,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கூறிய அவர், இந்த விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கு இதர துறைகளின் உதவி நாடப்பட்டுள்ளதாகச் சொன்னார்.

பொதுமக்கள் நிலைமையைப் புரிந்து கொள்வர் என நம்புகிறோம். இன்று விண்ணப்பித்து நாளை அங்கீகரிப்பதற்கு சாத்தியமில்லை. பெரும் எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டியுள்ளதோடு அதற்கு அதிகமான பணியாளர்களும் தேவைப்படுகின்றனர் என்றார் அவர்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 17 முதல் 19 ஆம் தேதி வரை பெய்த அடை மழை காரணமாக சிலாங்கூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.

இந்த வெள்ளத்தில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 10 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது.


Pengarang :