HEALTHMEDIA STATEMENTPBT

எதிர்வரும் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அம்பாங்கில் பொங்கல் விழா

அம்பாங், பிப்.6- இந்தியர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா அம்பாங்கில் உள்ள டத்தோ அமாட் ரசாலி மண்டபத்தில் இந்திய சமூகத் தலைவர், மலேசிய தமிழர் சங்கம் (அம்பாங் கிளை), அறம் இயக்கம், லெம்பா ஜெயா, புக்கிட் அந்தாராபங்சா சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் இணை ஏற்பாட்டில் நடைப்பெற உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு புக்கிட் அந்தாராபங்சா மற்றும் லெம்பா ஜெயா சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர்கள் சுசானா, டாய்ங் மற்றும் தமிழர் சங்கத்தின் தேசியத் தலைவர் எம்.ஜெ.கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

நமது பாரம்பரிய நடனமான பரதம், மயிலாட்டம், கோலாட்டம், கரகாட்டம் போன்றவைகளுடன்,  நமது  தற்காப்பு கலையான சிலம்ப விளையாட்டுடன் இந்நிகழ்ச்சி தொடங்கும் என இந்திய சமூகத் தலைவரும் அறம் இயக்கத்தின் தலைவருமான நடேசன் வரதன் கூறினார்.

இந்த விழாவில் பூத்தொடுத்தல், தோரணம் பின்னுதல், மட்டை பின்னுதல், கோலம் போடுதல், இசை நாற்காலி, உறி அடித்தல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் தமிழ் பாரம்பரிய உடை அணிந்து வரும் போட்டியும் நடைபெற இருக்கின்றன.

இவ்விழாவின் சிறப்பு அம்சமாக சிலாங்கூர் மாநில அரசு உதவி திட்டங்களுக்கான பாரங்கள், டிப்ளோமா, டிகிரி கல்வி நிதி உதவிக்கான பாரங்கள் உட்பட இதர விளக்க உறைகளும் வழங்கப்பட உள்ளதாக இந்திய சமூகத் தலைவர் நடேசன் வரதன் கூறினார்.

ஆகவே, வரும் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை நடைபெறும் இவ்விழாவில் சுற்றுவட்டார மக்கள் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டனர்.


Pengarang :