ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

இணையம் வாயிலாக பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி விற்பனையா? சிலாங்கூர் வன இலாகா மறுப்பு

ஷா ஆலம், பிப் 7– இணையம் வாயிலாக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலுள்ள நிலங்கள் விற்கப்படுவதாக சில அரசு சாரா அமைப்புகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை சிலாங்கூர்  மாநில  வன இலாகா மறுத்துள்ளது.

சிலாங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 43,539 ஹெக்டர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிலங்கள் கடந்தாண்டில் இணையம் மற்றும் பேஸ்புக் வாயிலாக விற்கப்பட்டதாக ரிம்பா டிஸ்குளோஷர் புரோஜெட் எனும் சுயேச்சை அமைப்பு மேற்கொண்டு ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அந்த நிலங்கள் 1985 ஆம் ஆண்டு சிலாங்கூர் வன இலாகா சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்கள் அல்ல என்று சிலாங்கூர் மாநில வன இலாகா இயக்குநர் டத்தோ அகமது பட்சில் அப்துல் மஜிட் கூறினார்.

புலாவ் இண்டா (புலாவ் லுமுட்) பகுதியில் 192 ஹெக்டர் நிலமும் புஞ்சா ஆலமில் 72 ஹெக்டர் நிலமும் விற்பனைக்கு உள்ளதாக அகப்பக்கம் வாயிலாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் அவ்விரு இடங்களும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கான அந்தஸ்தைக் கொண்டிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

சிலாங்கூர் அரசு கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் மற்றும் ஈடுபாட்டின் வாயிலாக மாநிலத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் பரப்பளவு கடந்தாண்டு 250,250.29 ஹெக்டராக ஆக அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தீபகற்ப மலேசியாவில் வனப்பகுதிகள்  வர்த்தக நோக்கத்திற்காக விற்கப்படுவது தொடர்பில் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று குடியிருப்பாளர் சங்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் இயக்கவாதிகளை உள்ளடக்கிய அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தியிருந்தன.

 

Pengarang :