ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெள்ளம் பாதித்த இடங்களில் சொத்துடைமை மதிப்பு வீழ்ச்சியடையவில்லை- ரோட்சியா தகவல்

ஷா ஆலம், பிப் 8- கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் சிலாங்கூர் மாநிலத்தின் பல பகுதிகள் பாதிக்கப்பட்ட  போதிலும் மாநிலத்தில் சொத்துடைமை மதிப்பு வீழ்ச்சி காணவில்லை என்று வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

வெள்ளம் மற்றும் வெள்ளத்திற்கு பிந்தைய பாதிப்புகளை மாநில அரசு பத்தே நாட்களில் சரி செய்தது மாநிலத்தில் சொத்துடைமை மதிப்பு வீழ்ச்சி காணாததற்கு முக்கிய காரணமாகும் என்று அவர் சொன்னார்.

வெள்ளம் இரண்டு நாட்களுக்கு மட்டுமே நீடித்தது. அதனால் சொத்துகளுக்கான தேவையோ அதன் மதிப்போ பாதிக்கப்படும் என நான் கருதவில்லை என்று அவர் தெரிவித்தார்.

எனினும், இவ்விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆய்வு மேற்கொள்வதை நாங்கள் வரவேற்பதோடு அந்த ஆய்வின் முடிவுகளை பகிர்ந்து கொள்ளவும் தயாராக உள்ளோம். எது எப்படி இருப்பினும், அடிப்படையில் சொத்துடைமை வீழ்ச்சி காணவில்லை என்பதே உண்மை என்றார் அவர்.

சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைம வாரியத்தின் கீழுள்ள குறிப்பாக கட்டுபடி விலை வீடுகளின் விலையை மாநில அரசு தொடர்ந்து நிலை நிறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான அதிகப்பட்ச விலை 250,000 வெள்ளியாகும். பிரிமா எனப்படும்  1 மலேசியா மக்கள் வீடமைப்புத் திட்ட வீடுகளின் விலை இன்னும் அதிகமாகும். நமது நோக்கம் வீடுகளின் எண்ணிக்கையை குறைப்பதல்ல. மேலும் அதிகரிப்பதாகும் என்று அவர் தெரிவித்தார்.

கடந்தாண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சிலாங்கூர் மாநிலத்திற்கு 310 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டதாகவும் நாட்டிற்கு ஏற்பட்ட மொத்த இழப்பில் இது 50 விழுக்காடாகும் என்றும் தேசிய புள்ளி விபரத்துறை கடந்த மாதம் 28 ஆம் தேதி கூறியிருந்தது.


Pengarang :