ECONOMYMEDIA STATEMENTTOURISM

இந்தியா செல்லும் மலேசியர்கள் இன்று முதல் தனிமைப்படுத்த வேண்டியதில்லை

கோலாலம்பூர், பிப் 14- இந்தியாவுக்குள் நுழையும் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற மலேசியர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக இந்தியத் தூதரகம் கூறியது.

மேலும், மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு செல்லும் முழுமையாகத் தடுப்பூசி பெற்ற பயணிகள் விமானப் பயணத்திற்கு முன்னதாக கோவிட்-19 ஆர்டி- பிசிஆர் சோதனையை மேற்கொள்வதும் கட்டாயமில்லை என்று அது தெரிவித்தது.

இந்தியாவின் ஆத்மநிர்பார் தடுப்பூசித் தலைமைத்துவம் மேற்கொண்டு வரும் உலகில் மிக்பெரிய அளவிலான தடுப்பூசி இயக்கம் மற்றும் அமலில் இருக்கும் கோவிட்-19 விதிமுறைகள் காரணமாக மலேசியாவிலிருந்து தங்கள் நாட்டிற்கு வரும் சுற்றுப்பயணிகளுக்கான விதிமுறைகளை இந்தியா தளர்த்தியுள்ளது.

இந்தியப் பயணம் மலேசிய சுற்றுப்பயணிகளுக்கு பாதுகாப்பானதாகவும் இனிய நினைவுகளைத் தரக்கூடியதாகவும் அமைய இந்தியத் தூதரகம் வாழ்த்துகிறது என்று அத்தூதரகம் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவிட்-19 சான்றிதழ் தொடர்பில் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட பரஸ்பர அதிகாரப்பூர்வ அங்கீகாரம் எதுவும் இல்லாவிட்டாலும் நடைமுறையிலும் செயல்முறையிலும் தடுப்பூசி சான்றிதழ்களை இரு நாடுகளும் அங்கீகரித்துள்ளன.

பெருந்தொற்றுக்குப் பின்னர் கடந்தாண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி இந்தியா தனது எல்லைகளை சுற்றுலா நடவடிக்கைகளுக்கு திறந்து விட்டது. எந்த நாட்டினர் என்பதை பொறுத்து சில நிபந்தனைகளுடன் இந்த அனுமதி வழங்கப்படுகிறது.


Pengarang :