ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

ஜோகூர் தேர்தலில் பிரசாரக் கூட்டங்கள், வாக்காளர் சந்திப்புக்கு அனுமதி

கோலாலம்பூர், பிப் 19- ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான 14 நாள் பிரசார காலத்தின் போது பிரசாரக் கூட்டங்கள், சொற்பொழிவுகள் மற்றும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் நடவடிக்கைளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அம்மாநிலத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளில் (எஸ்.ஒ.பி.) இந்த அனுமதி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகளை 100 பேருக்கு மேற்போகாத எண்ணிக்கையில் கட்சி அலுவலகம் மற்றும் தேர்தல் நடவடிக்கை அறைகளில் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

தேர்தல் பரப்புரைகள், சொற்பொழிவுகள் மற்றும் பிரசாரம் மேற்கொள்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஏற்பாட்டாளர்கள் முன்கூட்டியே அரச மலேசிய போலீஸ் படையிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் பரப்புரைகள் மற்றும் சொற்பொழிவுகள் இரண்டு மணி நேரத்திற்கு மேற்போகாமலும் இரவு 10.00 மணிக்கு முன்னதாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். திறந்த வெளிகள் மற்றும் பொது இடங்களில் தேர்தல் பிரசார பரப்புரைகள் மற்றும் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி கிடையாது.

வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொள்வோருக்கான எஸ்.ஒ.பி. விதிகளின்படி, பிரசாரத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை ஐவருக்கும் மேற்போகாமல் இருக்க வேண்டும். மேலும் இப்பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவோர் வீட்டிற்குள் நுழையவோ வீட்டிலுள்ளவர்களை சந்திக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். வேலிக்கு வெளியிலிருந்துதான் பிரசுரங்களை விநியோகிக்க வேண்டும்.

தேர்தல் தினத்தன்று வாக்காளர்கள் அனைவரும் இரட்டை முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகளை எதிர்நோக்கும் வாக்காளர்கள் உடனடியாக பிற வாக்காளர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அந்த எஸ்.ஒ.பி. விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


Pengarang :