ECONOMYMEDIA STATEMENTSELANGOR

குழாய் பொருத்தும் பணியை சீராக மேற்கொள்ள பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை- இங் ஸீ ஹான் கோரிக்கை

ஷா ஆலம், பிப் 21- லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு மையத்திற்கான குழாய்களைப் பொருத்தும் பணியை மேற்கொள்வதற்கு ஏதுவாக பெர்சியாரான் புஞ்சா ஜாலில் சாலையை மூடுவதில் பொது மக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக கின்ராரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கேட்டுக் கொண்டுள்ளார்.

இத்திட்டம் தொடர்பில் சுற்றுவட்டார மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக கூறிய அவர், எனினும், இப்பகுதியிலுள்ள வீடமைப்பு பகுதிகளுக்கு நீர் விநியோகத்தை ஏற்படுத்தித் தருவதற்காக இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டியுள்ளது என்று சொன்னார்.

பொது மக்கள் மற்றும் வாகனமோட்டிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க அனைத்து தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளதால் இத்திட்டம் குறித்து யாரும் அச்சமடைய வேண்டியதில்லை என்று அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதியில் பொருத்தமான போக்குவரத்து முறை இவ்வாரம் அமல்படுத்தப்பட்டவுடன் அங்கு எளிதான முறையில் பயணத்தை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றார் அவர்.

சம்பந்தப்பட்ட பகுதியில் ரமலான் சந்தை அமைக்கப்படுவதை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க குத்தகையாளர் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குழாய்களைப் பொருத்தும் பணிக்காக அந்த சாலை கடந்த வியாழக்கிழமை முதல் போக்குவரத்துக்கு மூடப்பட்டது. இத்திட்டம் வரும் ஏப்ரல் மாதம் 17 ஆம் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :