ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நெரிசலைத் தவிர்க்க வருகை நேரத்தை முன்கூட்டியே திட்டமிடுவீர்-வெள்ள நிதி பெறுவோருக்கு கோரிக்கை

ஷா ஆலம், பிப் 22-  மத்திய மற்றும் மாநில அரசுகளின் வெள்ள உதவி நிதியைப் பெறுவோர் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட முன்கூட்டியே மண்டபத்திற்கு வருவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதை தவிர்க்க அவர்கள் நிதியைப் பெறுவதற்கு வரும் நேரத்தை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்று கிள்ளான் மாவட்ட அதிகாரி முகமது பைசால் அப்துல் ராஜி கூறினார்.

நிதி வெள்ள நிவாரண நிதியை வழங்கும் பணி மாலை 3.00 மணி முதல் இரவு  8.30 மணி வரை மேற்கொள்ளப்படுவதாக கூறிய அவர், உதவி நிதியைப் பெறுவதற்கு வர வேண்டிய தேதி விண்ணப்பம் செய்தவர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்படுவதாகச் சொன்னார்.

சிலர் பிற்பகல் 1.00 மணிக்கே கடுமையான வெயிலில் மண்டபத்தின் வெளியே காத்திருப்பதை காண முடிந்தது. இதன் காரணமாக மண்டபத்திற்கு வெளியே நீண்ட தொலைவிற்கு பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார் அவர்.

ஷா ஆலம், கெமுனிங் உத்தாமா எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில் வெள்ள உதவி நிதியைப் பெறுவதற்கு பொதுமக்கள் இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு வரிசையில் காத்திருக்க நேர்ந்தது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

இந்த நிதியளிப்பு நிகழ்வு வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் எனக் கூறிய அவர், வேலைக்குச் செல்வோரும் எந்த சிக்கலுமின்றி நிதியைப் பெறுவதற்கு ஏதுவாக இரவு 8.30 மணி வரை  இச்சேவை வழங்கப்படும் என்றார்.


Pengarang :