ECONOMYHEALTHMEDIA STATEMENT

இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட 11 பேருக்குக் கோவிட்-19 – அவை நடவடிக்கைகளில் பங்கேற்கத் தடை

ஷா ஆலம், மார்ச் 14– சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட 11 பேருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ கெம்பாங்கான்  உறுப்பினர் இயான் யோங் ஹியான் வா மற்றும் கோம்பாக் செத்தியா உறுப்பினர் ஹில்மான் இட்ஹாம் ஆகியோரிடம் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் கோவிட்-19 நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகச் சட்டமன்றச் சபாநாயகர் இங் சுயி லிம் கூறினார்.

அவ்விரு உறுப்பினர்களும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இங்குள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் கட்டிடத்தில் மொத்தம் 248 பேருக்குக் கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

நோய்த் தொற்று கண்டவர்கள் சட்ட மன்றத்திற்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் வீட்டிலேயே ஆர்.டி.கே.- ஆண்டிஜென் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

இன்று சட்டமன்றக் கூட்டத் தொடரின் தொடக்க நிகழ்வு சீராகவும் ஒமிக்ரோன் அச்சம் காரணமாக சுருக்கமாகவும் நடைபெற்றதாக இங் தெரிவித்தார்.

மேன்மை தங்கிய சுல்தானின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இரு தினங்களுக்கு நடைபெறும். அதன் பின்னர் வரும் வியாழன்று உறுப்பினர்கள் விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுவார்கள் என்றார் அவர்.


Pengarang :