ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 10,783 பேர் வீடு சீரமைப்புத் திட்டத்தில் பயன் பெற்றனர்

ஷா ஆலம், மார்ச்  15-  கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்த 10,783 வீடுகளின் உரிமையாளர்கள் சீரமைப்பு மற்றும் மறு நிர்மாணிப்பு திட்டத்தின் கீழ் உதவி பெற்றனர்.

கிள்ளான், பெட்டாலிங், உலு லங்காட், கோல லங்காட் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்குக் கடந்த பிப்ரவரி வரை இந்த உதவித் தொகை வழங்கப்பட்டதாக வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

இந்த உதவித் திட்டம் மூன்று பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. சிறிய அளவில் பழுதடைந்த வீடுகளுக்கு 5,000 வெள்ளியும் மிதமான பாதிப்பு கொண்ட வீடுகளுக்கு 15,000 வெள்ளியும் மறு நிர்மாணிப்பு செய்வதற்கு 56,000 வெள்ளியும் வழங்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

மறு நிர்மாணிப்பு செய்வதற்கு இதுவரை 44 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்,  இவ்வீடுகள் நோன்பு பெருநாளுக்கு முன்பாக நிர்மாணிக்கப்படும் என்றார்.

முன்னதாக அவர், பூலாவ் இண்டா மற்றும் கம்போங் பாரு ஹைக்கோமில் பழுதுபார்க்கப்பட்ட வீடுகளைப் பார்வையிட்டார்.

இந்த வீடு சீரமைப்பு மற்றும் மறுநிர்மாணிப்புத் திட்டத்திற்கான  நிதியை மத்திய அரசு வழங்கிய வேளையில் திட்டப் பணிகள் சீராக நடைபெறுவதை ஒருங்கிணைக்கும் பொறுப்பை மாநில அரசு ஏற்றிருந்ததாக ரோட்சியா கூறினார்.

இத்திட்டத்திற்கு நிதி வழங்குவதில் விரிவான ஆய்வு தேவைப்படுகிறது. ஆகவே, இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்தவர்கள் பொறுமை காக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 17 முதல் 19 ஆம் தேதி வரை ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன.


Pengarang :